ந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2005-2012 கால கட்டத்தில் விவசாயத் துறைக்கு வெளியில் 5.2 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2013-2019 கால கட்டத்தில் 3.8 கோடி புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகும் என்று கிரைசில் மதிப்பிட்டிருக்கிறது.
இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் வேலை செய்யும் வயதிலான மக்கள் தொகை 8.5 கோடி அதிகரித்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களில் 5.1 கோடி பேர் தொழில், சேவை துறைகளில் வேலை தேடுவார்கள். ஆனால், 3.8 கோடி பேருக்குத்தான் வேலை வாய்ப்பு கிடைக்கும். எஞ்சியவர்கள் விவசாயத்துறைக்கு திரும்புவதன் மூலம், விவசாயத் துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி அதிகரிக்கும்.
இப்போதே 49% மக்கள் ஈடுபட்டுள்ள விவசாயத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% மதிப்பு மட்டுமே சேர்கிறது. பன்னாட்டு ஏகபோகம், மானியவெட்டு என்று கொல்லப்பட்டு வரும் விவசாயம் அழிக்கப்படுவதினாலேயே மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களை நாடுகின்றனர். மேலே சொன்னபடி, இவ்வாறு விவசாயத்திலிருந்து வெளியேறும் உழைக்கும் மக்கள் அனைவரையும் உள் வாங்குவதாக தொழில்/சேவைத் துறைகள் இல்லை. வேலையற்றோரை தாங்குமளவு விவசாயமும் வளமாக இல்லை. இறுதியில் வேலையற்றோர் விகிதம் வேகமாக வளர்கிறது.
கிரிசிலின் ஆய்வுப்படி சமீப ஆண்டுகளில் தகவல்/தகவல் தொழில் நுட்பத் துறை, வணிக மற்றும் நிதித் துறை சேவைகள் போன்ற ஆள் தேவை குறைவான துறைகளில் வளர்ச்சி ஏற்படுவதால் வேலைவாய்ப்பு இல்லாத பொருளாதார வளர்ச்சி நிலை உருவாகியுள்ளது. இந்த துறைகளில் ரூ 10 லட்சம் மதிப்பு கூடுதல் ஏற்படுத்துவதற்கு கூடுதலாகஓரிரு ஊழியர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், இந்தத் துறைகளில் ஏற்படும் அதிக வளர்ச்சி போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. உதாரணமாக, 2012-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19%-ஐ ஈட்டிய சேவைத் துறையில் மொத்த உழைக்கும் மக்களில் 3% மட்டுமே வேலை செய்தனர்.
இரண்டாவதாக, உற்பத்தித் துறையில் இயந்திர மயமாக்கலின் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதற்குக் காரணமாக தொழில் நுட்ப முன்னேற்றத்தையும், தொழிலாளர் நலச் சட்டங்களையும் கிரிசில் சுட்டியுள்ளது.
பொருளாதார அகதிகள்
சொந்த நாட்டிலேயே பொருளாதார அகதிகள்.
அதாவது, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், 8 மணி நேர வேலை போன்ற விதி முறைகளின் காரணமாக முதலாளிகள் தொழிலாளர்களை நீக்கி விட்டு இயந்திரங்கள் அதிகமாக ஈடுபடுத்துகின்றனர். இதனால் வேலை வாய்ப்பு குறைகிறது. எனவே, இந்த சட்ட திட்டங்களை அகற்றி விட்டு, சுதந்திரமான தொழிலாளர் சந்தையை உருவாக்கினால், அடிமைகளாக வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வந்து குவியும் வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தும் சுரண்டலுக்கு இணையாக அனைத்து தொழிலாளர்களையும் சட்டபூர்வமாக நடத்துவதுதான் முதலாளிகளின் கோரிக்கை. கிரிசிலின் ஆய்வும் இந்த நோக்கத்தைத்தான் கொண்டிருக்கிறது.
2005 வரையிலான 7 ஆண்டுகளில் (1998-2005) தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.68% அதிகரித்தது. 2005-2012 இடையிலான ஏழு ஆண்டு காலத்தில் தொழில் துறையில் 1% மதிப்புக் கூடுதலுக்கு வேலை வாய்ப்பு 0.17 மட்டுமே அதிகரித்தது. அதாவது, தொழில் துறையின் விற்பனை மதிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் அதில் உருவாகும் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை சிறிதளவே அதிகரித்தது.
பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவின் வறுமையை ஒழித்துக் கட்டும் மந்திரக் கோல் என்று மன்மோகன் சிங் தலைமையிலான உலகமயக் கொள்கையின் ஆதரவாளர்கள் சாதிக்கின்றனர். இந்தியாவின் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் சேவைத் துறையிலும், தொழில் துறையிலும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி, நாட்டில் வறுமையை ஒழிக்கப் போவதாகச் சொல்லும் இந்த மோசடி பொருளாதாரக் கொள்கையின் யோக்கியதை இப்படி பல்லிளிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் நாட்டின் ‘வளர்ச்சி’க்காக முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி விடும் அதே நேரத்தில், மக்களுக்கு விவசாயத்தில் வேலை பார்த்தால் பட்டினி, தொழில் துறையில் வேலை வேண்டுமென்றால் உரிமைகளை அனைத்தும் விட்டுக் கொடுத்து அடிமைகளாக பணி புரியும்படி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகள், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாத சேவைத் துறை என்பதுதான் இந்த பொருளாதாரக் கொள்கையின் பலனாக உள்ளது.
கோடிக் கணக்கான மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிய விட்டிருப்பதுதான் 20 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார் மய, தாராள மய, உலக மய கொள்கைகளின் விளைவு. அவற்றை இன்னும் தீவிரப்படுத்தினால்தான், அதாவது மக்களை இன்னும் பராரிகளாக மாற்றினால்தான் நாங்கள் தொழில் முனைவு காட்டி வளர்ச்சிக்கு வழி வகுப்போம் என்று முதலாளிகள் பிடிவாதம் பிடிக்கின்றனர்.