Friday, February 18, 2011

மன்மோகன்சிங் என்னும் பொருளாதார அடியாள்!





இறுக்கக் கட்டியிருக்கும் அவரது மண்டைக்குள் இருப்பதில் கொஞ்சம் வெளிவந்திருக்கிறது. பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டு கள்ளமௌனம் சாதித்துக் கொண்டும், அவ்வப்போது, ‘எனக்குத் தெரியாது’, ‘விரைவில் சரி செய்யப்படும்’, ‘பரிசீலனை செய்கிறது அரசு’ என்று இரண்டொரு வார்த்தைகளால் முனகிக்கொண்டும் இருந்த இந்தியப் பிரதமர் நேற்று காலை 11 மணிக்கு , அவரது இல்லத்தில் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர்களுக்கு  பேட்டியளித்து இருக்கிறார்.

 
ஸ்பெக்ட்ரம் ஊழலின் விவகாரங்கள் தனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லையென்றும், தனக்கும் அதற்கும் எப்போதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.  சம்பந்தப்பட்ட முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு  தனது அரசு சித்தமாக இருப்பதை தெரிவித்திருக்கிறார். ஆ.ராசாவை திரும்பவும் அமைச்சராக்கியதற்கு கூட்டணி அரசுக்காக செய்துகொண்ட சமரசமே காரணம் என்றிருக்கிறார்.  தான் ஒன்றும் நொண்டி வாத்து அல்ல என மறுத்திருக்கிறார். சிறு சிறு தவறுகள் தன்னிடம் இருந்திருக்கலாம், ஆனால் மற்றவர்கள் சொல்வது போல குற்றவாளி அல்லவென்று சொல்லி சீசரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராகவே இருக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  தன் மீது எந்த களங்கமுமில்லை என்பதை அவரது ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் செய்துகொண்டு இருந்தன. ஆனால், அவரது முகம் கிழிந்து தொங்கியதையும், வார்த்தைகள் நாற்றமெடுத்ததையுமே பார்க்க முடிந்தது.

ஊழலும், விலைவாசி உயர்வும் நாட்டில் முன்னுக்கு வந்துள்ள இரு வேறு பிரச்சினைகள் என்று சொல்லிய அவர், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழலைத் தடுக்க முடியாது எனவும் ஒருக் கட்டத்தில் சொல்கிறார்.  நான் மட்டுமல்ல, யார் வந்தாலும் இதுதான் கதி என்பதே அதன் அர்த்தமாயிருக்கிறது. சுனாமியைப் போல, புயலைப் போல அவையெல்லாம் இனி  இயற்கைச் சீற்றங்கள் என்னும் லேபிள்களில் அடங்கும் என்று சொல்லிவிட்டார். ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘அமெரிக்கப் பேரரசு’ புத்தகத்தின் பக்கங்களும், அதில் வந்த சில முகங்களுமே இந்த நேரத்தில் உள்ளுக்குள் ஓடுகிறது.

அத்தோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மானியங்களால் இந்த அரசுக்கு ஏற்பட்ட இழப்பு போன்றதுதான்  இந்த ஊழலும் என்று  விளக்கம் அளிக்கிறார். அதாவது,  உணவுதானியம், உரம், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தையும்,  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டையும் ஒரு தராசில் நிறுத்திவைத்து தேசத்தின் முன்னே காட்டுகிறார். அதாவது,  2ஜீ அலைவரிசையை, தாங்கள் விருப்பப்பட்ட பெரும் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததும்  மானியம் என்கிறார். என்ன  புத்தி இது?

மீண்டும் மீண்டும் தெளிவாகிறது. பிரதமர் மன்மோகனன்சிங்கிற்கு இப்போதும் நெருடலாகவும், உறுத்தலாகவும் இருப்பது, கோடி கோடியாய்  ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல. இந்த நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு,  அன்றாடங்காய்ச்சிகளுக்கு மானியமாய் கொடுப்பதன் மூலம் ஏற்படும் வருமான இழப்புத்தான். இந்த ஒரு ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட 1.76 லட்சம் கோடியைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் இரண்டு முழு ஆண்டுகளுக்கு முழுமையான உணவு மானியம் வழங்க முடியும் என்கிறார் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி.

இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார நிபுணர்?
இந்த மன்மோகன் சிங்கா பொருளாதார  மேதை?
பெரும் ஊழல்களால் தேசத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிற- பெருமுதலாளிகளுக்கு சேவகம் செய்து  ஏழைகளின் வயிற்றில் அடிக்கிற-  ஒரு ஆபத்தான பொருளாதார அடியாள்!

நன்றி : மாதவராஜ் 

No comments:

Post a Comment