தேசம் நாசமாக கரம் கோர்த்தவர்கள்
- சு.பொ.அகத்தியலிங்கம்
- சு.பொ.அகத்தியலிங்கம்
காங்கிரஸ் ஒழிந்து போகவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. தாங்க முடியாத விலையேற்றமும் வாழ்க்கைத் துயரங்களும்தான் மக்களை இப்படி புலம்ப வைத்திருக்கிறது .அதே போல “ மோடி வந்து விடுவாரா ?” எனப் பயங்கலந்து கேட்காத இடம் குறைவு. மக்கள் மத நம்பிக்கை உள்ளவராகவே உள்ளனர் ஆயினும் யாரும் மதச் சண்டையை, கலவரத்தை விரும்பவில்லை. மதச் சார்பின்மை பற்றிய தெளிவு மக்களிடம் குறைவாக இருக்கலாம்.
ஆனாலும் மதமோதலை வெறுக்கின்றனர். வளர்ச்சி பற்றி மோடி பேசுவதும் குஜராத் மாடலென அவரது ஊது குழல்கள் தமுக்கடிப்பதும் ஒரளவு அரசியல் விழிப்புணர்வும் ஊடக பரிச்சயமும் உள்ள ஒரு பகுதியினர் மட்டுமே அறிந்த செய்தி. அவற்றின் பொய்மை அம்பலப்பட்டிருப்பினும் அதை கார்ப்பரேட் ஊடகங்கள் பூசி மெழுகுவதால் இன்னும் போதுமான அளவுப் போய்ச்சேரவில்லை. அதேசமயம் மோடி மீது மக்களுக்கு ஒருவித அச்சமும் பீதியும் உள்ளது. காங்கிரஸ், பாஜக இரண்டில் எது பொருளாதாரச் சீரழிவிற்குக் காரணம்.
நிச்சயமாக முதல் குற்றவாளி காங்கிரஸ். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நடந்த நாடகக் காட்சிகளை மனதில் கொஞ்சம் ஓடவிட்டுப் பாருங்கள். பட்ஜெட் கூட்டத்தொடர். மழைக்கால கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர் என ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதும் நடந்தது என்ன? அவையில் கூச்சல் குழப்பம், அவை ஒத்திவைப்பு, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பிரதான எதிர்க்கட்சி முடங்கியது.
ஆயினும் கடைசி நாள் பலமுக்கிய மசோதாக்கள் சத்தமின்றி நிறைவேற பாஜக முழு ஒத்துழைப்பு. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை நாசப்படுத்தியுள்ள அனைத்து மசோதாக்களையும் கொண்டு வந்தது காங்கிரஸ் , விவாதமே செய்யவிடாமல் சபையை முடக்கிவிட்டு மசோதாக்கள் நிறைவேறத் தோள் கொடுத்தது பாஜக. பெருமுதலாளிகள் அந்நிய முதலைகள் தேசத்தை சூறையாடுவதில் இருவருக்கும் மாற்றுக் கருத்து ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் தேவையற்ற கூச்சலைக் கிளப்பி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு தேசமும் மக்கள் வாழ்வும் நாசமாக இரகசியமாக கரம் கோர்த்து செயல்பட்டவர்கள்தாம் இருவரும். ஆனால் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் போராடியவர்கள். போராடிக்கொண்டே இருப்பவர்கள் இடதுசாரிகளே !நேற்றும் இன்றும் அதுவே உண்மை.பாஜகவிடம் மோடியிடம் மாற்றுக்கொள்கை எதுவும் கிடையாது என்பதுடன் மக்களை மோதவிடும் மதவெறியும் சமூகநீதிக்கு எதிரான கோரப்பற்களும் இந்துத்துவம் என்கிற விஷக் கொடுக்கும் கூடுதலாக உண்டு .
மக்கள் இந்த கோரப்பற்களை,விஷக் கொடுக்கை வெறுப்பவர்களே. ஆனால் தண்ணீரில் தத்தளிப்பவன் கரையேற தெப்பம் தேடுவான் என்பதை அறிந்து வாய்மூடி அருகே வருகிறது முதலை; நம்பி ஏறினால் முதலைக்கு - மதவெறிக்கு தேசம் இரையாகிவிடும் . ஆம். வெள்ளத்தின் சுழலில் இருந்தும் முதலையின் வஞ்சகத்திலிருந்தும் ஒரே நேரத்தில் தேசமும் மக்களும் காப்பாற்றப்பட வேண்டும். சிக்கலானதுதான். கடுமையானதுதான்.
ஆயினும் முயன்றால் முடியும் . தில்லியில் சரியோ தப்போ வேறு தெப்பத்தை மக்கள் கண்டு தொற்றிக்கொண்டனர் . இந்தியா நெடுக மாற்றுதெப்பத்தை மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆங்காங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப வாய்ப்புள்ள அனைத்தையும் பயன் படுத்த மக்கள் தயாராகிவிட்டனர் . அந்த ஆர்வமும் தேடலும் கோபமும் எங்கும் முணுமுணுப்பாக அல்ல உரத்த சப்தமாக கேட்கத் துவங்கிவிட்டது ; இது மேலும் மேலும் வலுக்கும் ; ஆயின் தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ;
எனவே, இதுவே இடதுசாரி சக்திகளும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் வீதியில் வீறுடன் செயல்படும் தருணம்.
நன்றி : தீகத்திர்