Monday, January 13, 2014

cylinder

எரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை (1)

அறிமுகம்
ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு அடையாள அட்டை வழங்கப்பட்டு அந்த அடையாள அட்டை எண் அரசாங்கத்தில் பதிவேடுகளில் அந்த குடிமகனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு அது ஆதார் அட்டை என்று நடைமுறையில் அழைக்கப்பட்டு அதை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவனால் வாங்க முடியாத அளவிற்கு விலையேற்றம் பெற்றிருக்கும் அன்றாடம் புழங்கும்  சில அத்தியாவசியப் பொருட்களை அவனுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் அரசால் மானிய விலையில் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் பொழுது இந்த மானியங்கள் விற்பனையாளருக்கு செல்கிறது. குடிமகனுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த மானியங்களை பணவடிவில் நேரடியாக அவனது வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டு சந்தைவிலையில் அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் அரசால் துவங்கப்பட்டுள்ளது.  ஆதார் அட்டையானது அவனது தகவல்களை கொண்டிருப்பதால், அவனது வங்கிக் கணக்கில் மானியங்களை சேர்க்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது எரிவாயு உருளையை வாங்குபவர் சந்தைவிலையில் அதை வாங்குவது என்ற முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மானியங்களை ஒழித்துக் கட்டுவது என்ற திட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகும் இது.
குடிமகனின் வருவாயை வைத்து அவருக்கு வழங்க வேண்டிய மானியம் தீர்மானிக்கப்படும் என்றும்  சமையல் எரிவாயுவைப் பொருத்தவரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மானியம் ரத்து செய்ய வேண்டும் என்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை நிர்ணயிப்பதற்காக நிபுணர் பாரிக் தலைமையில் அமைந்த உயர்மட்டக்குழு முடிவு செய்திருக்கிறது. அதன் அறிக்கை அக்டோபர் 2013ல் சமர்ப்பிக்கப்பட்டு அரசு அதனை ஏற்றுக் கொண்டுவிட்டது. அதன் விளைவாக தற்பொழுது (டிசம்பர் 2013) 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையானது ரூ 390/- க்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதானது சந்தைவிலையான ரூ 1055/- கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அரசு நிர்ணயித்த மானியத் தொகையான உருளைக்கு ரூ 450/- என்பது வங்கிக் கணக்கில் உடனடியாக சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் அமலுக்கு வராத மாவட்டங்களில் உள்ளவர்கள் உருளைக்கு ரூ 390/- ம் அமலுக்கு வந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் உருளைக்கு ரூ 605/- செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் வறுமைக் கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு (நகர்ப்புறத்தில் தினமும் 1800 கலோரி உணவு அல்லது கிராமப்புரத்தில் 2400 கலோரி உணவு வாங்க வசதியுள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள்) இன்னும் குறுகிய காலத்திற்குள் இந்த மானியமும் நிறுத்தப்பட்டு அவர் சந்தைவிலைக்கு உருளையை வாங்க வேண்டியது என்பதே அரசின் தற்போதைய நிலை. இது சமையல் எரிவாயுவை எரியும் பிரச்சனையாக மாற்றி வருகிறது. இந்தப் பிரச்சனையை சற்று உற்று நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அரசின் செயல்திட்டம்
இந்தியாவில் 28.5 சதமான குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தி சமையல் செய்கின்றன என்று 2011ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரம் கூறுகிறது இன்னும் 49 சதவீத குடும்பங்கள் விறகைப் பயன்படுத்தியே சமையல் செய்கின்றன. சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தினால் விறகைப் பயன்படுத்துவதைவிட அது 20 சதமான கரியமிலவாயுவைவே உமிழ்கின்றன. எனவே இந்தப் பிரச்சனை சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு ஐக்கியநாடுகள் உருவாக்கித் தந்த திட்டமான மில்லேனியம் டெவலெப்மெண்ட கோல்-ல் அனைத்துக் குடும்பங்களும் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியா இந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட நாடாகும். நமது நாடும் விஷன்-2015 என்ற திட்டத்தில் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் சமையல் எரிவாயு வழங்கப்பட வேண்டும் என்றும் இதை சாத்தியப்படுத்துவதற்காக ராஜீவ் காந்தி கிராம சமையல் எரிவாயு விதாரன் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்து, அதில  2015க்குள் கிராமப்புரங்களில் 75 சதம் குடும்பங்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டுவரவும் இதற்காக 5.5 கோடி புதிய இணைப்பை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு திட்டத்தை ஒருபுறம் எழுதி வைத்துக் கொண்டு, மறுபுறம் பாரிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறது நமது அரசாங்கம்.
பாரிக்குழு பரிந்துரைகள்
அரசாங்கத்தின் செவீனங்களில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியமே மிக அதிகமானது என்றும் பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலமாக  2012-13ல் ரூ 161,029 கோடி குறைவசூல் (Under Recovery) ஆகிறது எனவும், இதை சமாளிப்பது எப்படி என்பதை ஆய்வதற்காக முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினர் பாரிக் தலையில் ஐந்து பேர் கொண்ட ஒரு நிபுணர் குழு ஜூன் 2013ல் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவான கீழ்க்கண்ட விஷயங்களை ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
  • பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிப்பதற்கான தற்பொழுது நடைமுறையில் உள்ள வழிமுறைகளை பரிசீலிப்பது அதை மாற்றி ஏற்றுமதி விலைக்கு (Export Parity Pricing) இணையாக அமையக்கூடிய ஒரு விலை இயக்கமுறை (Price Mechanism) அடைவது; இந்த விலை இயக்கமுறையும் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செய்யும் கப்பல் ஏற்றுமதி விலைக்கு (FOB) இணையாக இருப்பது போல் வடிவமைப்பது.
  • பெட்ரோலியப் பொருட்களை விற்பனை நிறுவனங்களுக்கு ஆகும் குறைவசூலுக்கு ஒரு நியாயமான இழப்பீடு வழங்கும் சூத்திரத்தை அடையாளம் காண்பது.
  • பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் செயல்பாட்டை பரிசீலித்து அவைகளின் செயல்திறனையும் கொள்முதல் திறனையும் உயர்த்துவதற்கான ஆலோசனைகளை அடையாளம் காண்பது.
இறக்குமதி ஒப்பீட்டு விலை சரியானதா இல்லையா என்பதை கமிட்டி ஆய்வு செய்ய வேண்டும் என்பதை விடுத்து இறக்குமதி ஒப்பீட்டு விலைலையை எப்படி அமல்படுத்துவது என்று நிர்ணயித்திருப்பது இதன் விஷயஆய்வு (Terms of Reference) திறந்த மனதுடையதல்ல என்பதைக் காட்டுகிறது. இப்படி ஆய்வு செய்யும் விஷயங்களே ஒரு திறந்த மனதுடையதாக இல்லாமல் தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தோதாக இருக்க வேண்டும் என்று ஒரு விஷய ஆய்வை வடிவமைப்பதே தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சாதகமாக கொள்கை முடிவெடுப்பதே அரசின் உள்நோக்கம் என்பது தெளிவாகிறது. எனவே அந்தக் குழுவின் முடிவானது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை அறிவிக்கும் முடிவுகளாக இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கீழ்க்கண்டவைகளே பாரிக்குழுவின் சமையல் எரிவாயுவைப் பற்றிய பரிந்துரைகள்:
  • மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளை வருடத்திற்கு 9லிருந்து 6 ஆக குறைப்பது. மானியத்தை பணமாக நேரடியாக வழங்கும் திட்டத்தை (DBTL) சுருக்கி குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வழங்குவது.
  • தற்போது 184 மாவட்டங்களில் மட்டுமே அமலில் உள்ள மானியத்தை பணமாக நேரடியாக வழங்குத் திட்டத்தை ஒராண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்துவது.
  • தற்போது மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையை உருளை ஒன்றுக்கு ரூ 250 உடனடியாக உயர்த்துவது (அதாவது ரூ 640ஆக மாற்றியமைப்பது)
  • குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவை நகர்ப்புரங்களில் வழங்கும் திட்டத்தை தீவிரமாக பரிசீலிப்பது
  • தற்பொழுது சமையல் எரிவாயுத் தேவையை பூர்த்தி செய்ய நாம் இறக்குமதியை பெரிதும் சார்ந்திருப்பதால் சமையல் எரிவாவுவானது எண்ணெய் சுத்திகரிப்பாலையின் கதவுவரை ஆகும் செலவை நிர்ணயிப்பத்தில் இறக்குமதிக்கு இணையான விலையின் (Import Parity Price) அடிப்படையில் விலை இயக்கமுறையை வடிவமைக்க வேண்டும்.
ஆக மொத்த்த்தில் சாமனிய மக்களுக்கு அடி மேல் அடி கொடுக்கும் பரிந்துரைகள் இவை என்பது தெளிவு. நகர்ப்புரத்தில் கழிநீர் இணைப்பு கொடுப்பது என்பதற்கு ஒரு நகராட்சி திட்டமிட்டு நிறைவேற்றுவதற்கு 25 ஆண்டுகள் ஆகிறது என்பது நாம் வாழுகின்ற காலத்தின் அனுபவம். இயற்கை எரிவாயுவை குழாய்கள் மூலம் இணைப்பு கொடுப்பது என்பது நிறைவேற்ற வேண்டுமானால் இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் என்பதை சொல்லத் தேவையில்லை. மூன்றாவது பரிந்துரையான உருளைக்கு ரூ 250ஐ உயர்த்துவது உடனடியாக அமலுக்கு வந்து அது ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு மட்டும் என்று அறிவிக்கப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது, இதன்விளைவாக ஆதார் அட்டை உள்வர்கள் மற்றவர்களை விட ரூ250 அதிகம் செலுத்தி வருகிறார்கள். எனினும் இந்த நிபுணர் குழுக்கான விஷய ஆய்வு பற்றியும் இக்குழுவின் செயல்பாடு மற்றும் இதன் அறிக்கை பற்றியும் கொஞ்சம் ஆழமாக நாம் பின்னால் பார்க்க வேண்டியதிருக்கிறது.
இது பிரச்சனையின் ஆளும் வர்க்கப்பார்வை மட்டுமே. பொதுமக்களுக்கும் ஒரு சாராரது பார்வை மட்டுமே விளக்கப்படுவதால் பிரச்சனையின் பன்முகத்தன்மை புலப்படுவதில்லை. பிரச்சனையின் மற்ற கோணங்கள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள சமையல் எரிவாயு பயன்பாட்டுத் தோற்றத்தின் வரலாற்றிலிருந்து துவங்க வேண்டும்.
சமையல் எரிவாயுவின் கதை
சமையல் எரிவாயு என்பது அடிப்படையில் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் ஆகிய மூலக்கூறுகளின் கலவையாகும். சாதாரண வெப்ப நிலையில் இது வாயு வடிவத்தில் இருக்கும்  கொஞ்சம் அழுத்தம் கொடுத்து குளிர்வித்தால் திரவாமாகிவிடும். இதற்கு நிறமும் மணமும் கிடையாது எனினும் இது கசிந்தால் ஆபத்து என்பதற்காக இத்துடன் சில மணமூட்டிகளை உற்பத்தியிடங்களில் சேர்க்கிறார்கள்.
சமையல் எரிவாயுவிற்கு இரண்டு மூலங்கள் உண்டு, பூமிக்கடியிலிருந்து இயற்கை எரிவாயுவையும் கச்சா எண்ணெயையும் எடுக்கும்போது கிடைக்கும் சமையல் எரிவாயுவானது மொத்த சமையல் எரிவாயு உற்பத்தியில் 60% ஆகும். மீதி 40% உற்பத்தியானது கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் பொழுது கிடைப்பது. கடந்த காலங்களில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகளிலிருந்து கிடைக்கும் சமையல் எரிவாயுவை கழிவு வாயுவாக கருதி எண்ணெய்க் கிணற்றின் அருகிலேயே எரித்து விடுவார்கள். இப்பொழுது அப்படிச் செய்வதில்லை.
எண்ணெய்/எரிவாயுக் கிணற்றிலிருந்து கிடைக்கும் மொத்த வாயுக்களில் சமையல் எரிவாயு மட்டும் 5% ஆகும். கச்சா எண்ணெயை குழாய்கள் மூலமாகவோ கப்பல் மூலமாகவோ கொண்டு செல்லுமுன் செய்ய வேண்டிய முன்சுத்திகரிப்பிலும் சமையல் எரிவாயு கிடைக்கும். சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெயை உட்செலுத்தியதும் முதலில் கிடைப்பது சமையல் எரிவாயுவே. இது செலுத்தப்படும் கச்சா எண்ணெயில் 3% ஆகும், எனினும் கச்சா எண்ணெயிலிருந்து 40% வரை சமையல் எரிவாயுவை உற்பத்தி செய்யலாம்.
சமையல் எரிவாயுவை பிரித்தெடுக்கும் பழக்கம் வந்ததே ஒரு சுவாரஸிமான கதை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெட்ரோலியப் பொருட்களை டாங்குகளில் சேமித்து வைத்திருக்கும் பொழுது அவை ஆவியாகி வந்தன. 1911ம் ஆண்டு அமெரிக்க வேதியல் விஞ்ஞானியான முனைவர் வால்டர் ஸ்னெல்லிங் (Dr. Walter Snelling) பெட்ரோலில் கலந்திருக்கும் புரோப்பேன் மற்றும் பியூட்டேன் வாயுக்களே இவை ஆவியாவதற்கு காரணம் என்று கண்டறிந்தார். இந்த இரண்டு வாயுக்களையும் பெட்ரோலிலிருந்து பிரித்தெடுக்கும் வழிமுறையை அவர்தான் வடிவமைத்தார். எனினும் இது ஆய்வுக் கூடத்திலிருந்து ஆலைக்கு வருவதற்கு மேலும் பத்தாண்டுகள் பிடித்தது. ஆலை உற்பத்தி வியாபார உற்பத்தியாவதற்கு இன்னும் இருபதாண்டு காலம் பொருத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விலை நிர்ணய இயக்கமுறை ஆரம்பகாலத்தில் மண்டல அளவிலேயே இருந்தது. இதன் உற்பத்தியும் விற்பனையும் பெருகப் பெருக இதற்குள் விலைநிர்ணய முறைக்குள் சர்வதேச அளவுக்கு விரிந்தது. 1950ல் 3 லட்சம் டன் விற்பனையான சமையல் எரிவாயுவானது 1960ல் 30 லட்சம் டன்னாக உயர்ந்தது. இது 1970ல் 1 கோடியே 10 லட்சம் டன்னாக உயர்ந்து விட்டது.
1973ல் ஏற்பட்ட எண்ணெய் அதிர்வில் (Oil Shock) எண்ணெய்வள நாடுகள் அதுவரை கழிவு வாயுவாக எரித்துக் கொண்டிருந்த பழக்கத்தலிருந்து சமையல் எரிவாயுவை பிரித்தெடுக்கும் ஆலைகளை நிர்மானிக்க ஆரம்பித்தார்கள். மேற்காசிய நாடுகள் இந்த விஷயத்தில் வேகமாக முன்னேறி வந்தன. உலகளவில் 1975ல் 6 மில்லியன் டன் திறன் கொண்ட சமையல் எரிவாயுவைப் பிரித்தெடுக்கும் ஆலைகளின் உற்பத்திதிறனானது 1980ல் 17 மில்லியன் டன்னாகவும் 1985ல் 30 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துவிட்டது. இதில் மேற்காசிய நாடுகளுக்கு மட்டுமல்ல தென் அமெரிக்க நாடுகளுக்கும் பொருந்தும். சமையல் எரிவாயுவைப் பொருத்தவரை 1980கள் அதிவேக வளர்ச்சி பெற்ற ஆண்டுகளாகும். சமையல் எரிவாயுச் சந்தையானது உளகளாவிய சந்தையாக மாறியது.
சமையல் எரிவாயு உலக உற்பத்தி மற்றும் தேவையின் வளர்ச்சியில் தற்போதைய நிலை
சமையல் எரிவாயு சந்தையானது 2000ம் ஆண்டில் 198 மில்லியன் டன்னாகவும் 2008ல் 239 மில்லியன் டன்னாகவும் 2012ல் 270 மில்லியன் டன்னாகவும் வளர்ந்துள்ளது. உலக சமையல் எரிவாயு உற்பத்தியில் மேற்காசிய நாடுகளின் பங்கு 24 சதமாகும். 2012ல் இவர்களின் மொத்த உற்பத்தியானது 65 மில்லியன் டன்னாக இருந்தது. மேற்காசிய நாடுகளைப் பொருத்தவரை அவர்களின் உற்பத்தியில் 60 சதமானம் எண்ணெய்க் கிணறுகளிலிருந்தே கிடைக்கிறது. 24 சதவீதமானது இயற்கை எரிவாயு உள்ளிட்ட மற்ற வாயுக்களை மாற்றுவதன் மூலமும் 10 சதவீத்ம் சுத்திகரிப்பு ஆலைகள் மூலமாகவும் கிடைக்கிறது. மேற்காசிய நாடுகளின் சமையல் எரிவாயு உற்பத்தியில் மிகப் பெரிய பங்கு வகிப்பது சவுதி அராம்கோ என்ற நிறுவனமாகும் 2008ம் ஆண்டில் இது மேற்காசிய சமையல் எரிவாயு உற்பத்தியில் 43% பங்கு வகித்தது. சமையல் எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிப்பது வடஅமெரிக்க பகுதியேயாகும். அவர்களின் பங்கு உலக உற்பத்தியில் 21% ஆகும். 2012ல் இவர்களின் மொத்த உற்பத்தியானது 59 மில்லியன் டன்னாக இருந்தது. இவர்களின் உற்பத்தியில் 60% இயற்கை எரிவாயுவிலிருந்து தயாரிப்பதாகும். மூன்றாவது இடத்தை வடகிழக்கு ஆசியாவும் (2012ல் 30 மில்லியன் டன்), நான்காவது இட்த்தை தென் அமெரிக்காவும் (2012ல் 27 மில்லியன் டன்). ஐந்தாவது இட்த்தை ஆப்பிரிக்காவும் (2012ல் 22 மில்லியன் டன்) ஆறாவது இடத்தை ஐரோப்பா மற்றும் பொதுவள நாடுகளும் (2012ல் 15 மில்லியன் டன்) ஏழாவது இடத்தை தென்கிழக்கு ஆசியாவும் (2012ல் 13 மில்லியன் டன்) எட்டாவது இடத்தை இந்திய துணைக் கண்டமும் (2012ல் 10 மில்லியன் டன்) வகிக்கின்றன. எனவே இந்திய துணைக் கண்டமும் ஒரு சிறிய அளவு (3.7%) உலக உற்பத்தியில் பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
சமையல் எரிவாயு உலக உற்பத்தியின் உட்சேர்மானம் இவ்வாறு இருக்கும் பொழுது, அதன் உலகத் தேவையின் உட்சேர்மானத்தை பார்த்தால் வேறு ஒரு வடிவம் கிடைக்கிறது. சமையல் எரிவாயுவிற்கு ஆயிரம் விதமான உபயோகங்கள் இருந்தாலும் சமையல் எரிவாயு நுகர்வில் சரிபாதி சமையல் அடுப்புக்களுக்கே பயன்படுகிறது. 2012ல் மொத்த உற்பத்தியான 270 மில்லியன் டன்னில் ஆசியா 80 மில்லியன் டன்னும், வட அமெரிக்கா 60 மில்லியன் டன்னும், ஐரோப்பா 50 மில்லியன் டன்னும் தென் அமெரிக்கா 30 மில்லியன் டன்னும், மேற்காசியா 30 மில்லியன் டன்னும் இதர பகுதிகள் 20 மில்லியன் டன்னும் உலக நுகர்வில் பகிர்ந்து கொண்டன.
சமையல் எரிவாயு விஷயத்தில் இந்திய நிலைமை
சமையல் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது, அதன் தேவையின் வளர்ச்சியை விடக் குறைவாக இருக்கிறது என்பதை எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடலாம். பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலவரம் இதுதான். உற்பத்தியானது 1990-91ல் 2.15 மில்லியன் மெட்ரிக்டன் ஆக இருந்தது 2002-03ல் 7.273 மில்லியன் மெட்ரிக்டன்னாக உயர்ந்திருக்கிறது. இதில் 4.903 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைககளிலிருந்தும் 2.37 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவிலிருந்தும்  கிடைத்தது எனினும் பற்றாக்குறையை இட்டு நிரப்ப 1.073 மில்லியன் மெட்ரிக்டன் (மொத்தத்தில் 13%) இறக்குமதி செய்தது. தேவையானது 2009-10ல் 12.746 மில்லியன் டன்னாக உயர்ந்துவிட்டது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் வேகம் தேவை அதிகரிப்பை விட குறைவாக இருப்பதால் இறக்குமதியானது 12.423 மில்லியன் டன்னாக உயர்ந்து மொத்த தேவையில் 22 சதவீதமாக உயர்ந்துவிட்டது. நாளொன்றுக்கு 30 லட்சம் சமையல் எரிவாயு உருளைகளை நாடெங்கிலும் விநியோகிக்கப்படுகின்றன. தேவை வளர்ச்சியானது ஆண்டுக்கு 8% இருந்து வருகிறது. இதைத்தவிர சமையல் எரிவாயுவின் பயன்பாடானது வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாது இதர உபயோகங்களுக்கும் பயன்படுத்தப்படுவதால், குறிப்பாக தொழில்துறைக்கு அதிகம் தேவைப்படுவதால் இதன் தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வீட்டு உபயோகத்திற்கு மட்டுமல்லாது, வியாபார நிறுவனங்களுக்கும். தொழில்துறைக்கும், போக்குவரத்திற்கும் பயன்பட்டு வருகிறது. ஐந்தாண்டுகளில் சமையல் எரிவாயுவின் நுகர்வில் ஏற்பட்ட மாற்றத்தில் வீட்டு உபயோகத்தை தவிர இதர உபயோகம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது
ஆண்டு
வீடு
வணிகம்
தொழில்
போக்குவரத்து
ஆ.டன்
சதவீதம்
ஆ.டன்
சதவீதம்
ஆ.டன்
சதவீதம்
ஆ.டன்
சதவீதம்
2004-05
9345
96%
143
1%
210
2%
52
1%
2009-10
11364
89%
879
7%
280
2%
223
2%
இந்தியாவில் கணிசமானவர்கள் இன்னும் சமையல் எரிவாவுவைப் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக இது நகர்ப்புர மக்கள் அதிகம் பயன்படுத்துவதாகவும் கிராமப்புர மக்கள் பயன்பாடு குறைவாக இருக்கிறது. இதன் விளைவாக கிராமப்புரங்களில் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. 2010ம் ஆண்டு நிலவரப்படி
 
நகர்ப்புரம்
கிராமப்புரம்
மொத்தம்
மக்கட் தொகை (லட்சங்களில்)
3262
8388
11650
குடும்பங்கள் (லட்சங்களில்)
950
1590
2540
சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்கள் (லட்சங்களில்)
838
312
1150
சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற குடும்பங்கள் (சதவீதத்தில்)
88%
19.6%
45%
ஆதாரம்: பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம்
விஷன்-2015 ஆவணமும் 2011-16க்கான தொலைநோக்குத் திட்டமும்
இந்த இரண்டு ஆவணங்களும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டவை. 2009ல் வெளியிடப்பட்ட முதலாவது ஆவணத்தில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்புகளை அதிகரிப்பதைப் பற்றி பேசுகிறது. தற்போதுள்ள 50% இணைப்புகளை 75% இணைப்புகளாக உயர்த்துவது, அதாவது 2015ல் 16 கோடி இணைப்புகள் என்ற நிலையை எட்டுவது, மண்ணெண்ணையிலிருந்து சமையல் எரிவாயுவிற்கு மாறிச் செல்வது, 5000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பொது சமையல் அறையை உருவாக்குவது ஆகியவை அடங்கும். கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பின் அடிப்படையில் பொதுச் சமையலறையைப் பராமரிப்பது அவர்கள் கையில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர ராஜிவ் காந்தி கிராமப்புர சமையல் எரிவாயு விதாரன் யோஜனா திட்டத்தை துவங்கி செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி  சமையல் எரிவாயு என்பது கிராமவாசிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலை மாற்றப்படும். 4500 குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களில் மலிவு விலையில் உருளைகள் வழங்குவதும் இதற்காக கிராமம் ஒன்றுக்கு மாதம் 600 உருளைகள் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டு அதற்கான தொகை ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெட்ரோலிய மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் 2011-16க்கான தொலை நோக்கு திட்டமானது அனைத்து பெட்ரோலிய பொருட்களை மக்களுக்கு இலகுவாக சரியான விலையில் கிடைக்கச் செய்வது. தேவை வளர்ச்சிக்கேற்ப வழங்கலை உத்தரவாதப்படுத்துவது பற்றிய ஆவணமாக இருக்கிறது. இந்தத்துறை கட்டமைப்புகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் பலம் பலவீனத்தை பட்டியலிடுகிறது. வழக்கமாக பலமும் பலவீனமும் தாராளமயமாக்கல் கொள்கைகளின் வெளிச்சத்திலேயே பட்டியலிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக மானிய விலையில் பொருட்களை சக்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படுவதை நிறுத்த முடியவில்லை என்பதும் அதிகரித்துவரும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் குறைவசூலுக்கும் முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறது.
இதில் சமையல் எரிவாயுவைப் பற்றிய பக்கங்களில், வளர்ந்து வரும் தேவையை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு உற்பத்தி கட்டமைப்புகள், இறக்குமதி கட்டமைப்புகள், விநியோக கட்டமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்குவது பற்றியும் அதற்கான நிதிதிரட்டல் பற்றியும் கூறியுள்ளது. ஆதார் அட்டை மூலமாக வசதியுள்ளவர்களுக்கு போய்ச் சேரும் மானிய விலை உருளைகளை நிறுத்துவது மற்றும் 2015க்குள் குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கும் கட்டமைப்பை 201 நகர்களில் உருவாக்குவது பற்றியும் கூறப்பட்டுள்ளது.
(தொடரும் …)

No comments:

Post a Comment