Monday, January 13, 2014

எரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை(2)

Liquefied petroleum gas
விலை நிர்ணயக் கொள்கை மூலமாக நடத்தப்படும் மோசடி
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்ற சொலவடையைக் கூறி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டே வருவது பற்றி நாம் சற்று நுணுக்கமாக நோக்க வேண்டும். இதில் சட்டியையும் அகப்பையையும் சற்று ஆழமாக ஆய்வு செய்தால் ஆளும் வர்க்கத்தின் வர்க்க நலன் அதில் உள்ளடங்கியிருப்பதை புரிந்து கொள்ள முடியும். தற்பொழுது விலை எப்படி கணக்கிடப்படுகின்றது என்ற விபரத்தை  பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பது அப்படியே கீழே உள்ள அட்டவணையில் உள்ளது.
டெல்லியில் சமையல் எரிவாயு உருளை விலையை கணக்கிடும் முறை
வ எண்
கூறுகள்
அலகு
11/12/13 முதல்
1*
பாரசீக வளைகுடாவில் கப்பலில் ஏற்றும் வரை ஆகும் செலவு
$/MT
895.43
2*
கூட்டல்: பாரசீக வளைகுடாவிலிருந்து இந்திய துறைமுகம் வரை ஆகும் கடல் வழி சரக்குக் கட்டணம்
$/MT
45.42
3
அடக்க விலை (சமையல் எரிவாயு விலை + போக்குவரத்து செலவு)
$/MT
940.85

அல்லது
Rs./Cylinder
835.45
4*
இறக்குமதி கட்டணம்
Rs./Cylinder
6.68
5*
சுங்க வரி
Rs./Cylinder
0.00
6*
இறக்குமதி ஒப்பீட்டு விலை (3+4+5)
Rs./Cylinder
842.14
7*
சுத்திகரிப்பாலை மாற்ற விலை
Rs./Cylinder
842.14
8*
கூட்டல்: உள்நாட்டு சரக்கு கட்டணம் மற்றும் சரக்கு ஏற்று/இறக்கு கட்டணம்
Rs./Cylinder
40.33
9*
கூட்டல்: எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் விற்பனைச் செலவு
Rs./Cylinder
10.52
10*
கூட்டல்: எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் லாபம்
Rs./Cylinder
7.03
11*
கூட்டல்: உருளையில் அடைக்கும் செலவு (உருளைவிலை உட்பட)
Rs./Cylinder
38.68
12
மொத்தச் செலவு (7+8+9+10)
Rs./Cylinder
938.7
13*
கழித்தல்: மத்திய அரசு மானியம்
Rs./Cylinder
22.58
14*
கழித்தல்: எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் குறைவசூல்
Rs./Cylinder
542.71
15
விநியோகஸ்தர்கள் கொடுக்கும் விலை (உருளை நிரப்பாலை விலை) (12-13-14)
Rs./Cylinder
373.41
16*
கூட்டல்: கலால் வரி
Rs./Cylinder
0.00
17*
கூட்டல்: விநியோகஸ்தர் கமிஷன் (கட்டமைப்பு ரூ 24.24+ ஏற்று/இறக்கு கூலி ரூ 16.47)
Rs./Cylinder
40.71
18*
கூட்டல்: மதிப்பு கூட்டு வரி
Rs./Cylinder
0.00
19
சில்லரை விற்பனை விலை
Rs./Cylinder
414.12
20
டெல்லியில் சில்லரை விற்பனை விலை
Rs./Cylinder
414.00
• விளக்கங்களுக்கு அடுத்த அட்டவணையைப் பார்க்கவும்
விளக்க அட்டவணை
வ எண்
கூறுகள்
விளக்கம்
1
கப்பலில் ஏற்றுவது வரை ஆகும் செலவு 60% பியூட்டேன் 40% புரோப்பேன் கொண்ட வாயுக்கலவைக்கு சவுதி அராம்கோ நிறுவனம் கொடுத்த முந்தையமாத ஒப்பந்த விலை மற்றும் முந்தைய மாதத்தில் ஒவ்வொரு நாளும் பிளாட்ஸ் கேஸ்வயர் அமைப்பு வெளியிடும் புள்ளிகளின் சராசரி
2
கடல் வழி சரக்கு கட்டணச் செலவு கிளார்க்ஸன் ஷிப்பிங் இன்டெலிஜென்ஸ் வீக்லியில் வெளியிடும் ஒப்பந்த கப்பல்களுக்கான கட்டண நிலவரத்தினடிப்படையில்  பாரசீக வளைகுடாவிலிருந்து இந்திய துறைமுகத்திற்கு கடல் வழி சரக்கு கட்டணத்தை கணக்கிடல்
4
இறக்குமதி கட்டணம் இறக்குமதிக் கட்டணமானது காப்பீடு, கடல் இழப்பு மற்றும் துறைமுகக் கட்டணம்
5
சுங்கவரி சமையல் எரிவாயுவிற்கு சுங்கவரி கிடையாது
6
இறக்குமதி ஒப்பீட்டு விலை இறக்குமதி ஒப்பீட்டு விலை என்பது ஒரு இறக்குமதியாளர் ஒரு பொருளை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு. மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவிற்கான மானியத் திட்டம் 2002ன் படி சமையல் எரிவாயுவின் விலை இறக்குமதி ஒப்பீட்டு விலையாக கொள்ளப்படுகிறது.
67
சுத்திகரிப்பாலை மாற்ற விலை சுத்திகரிப்பாலை மாற்ற விலை என்பது இறக்குமதி ஒப்பீட்டு விலைக்கு சமமாகும். இந்த விலையை கொடுத்துதான் சுத்திகரிப்பாலைகளிலிருந்து எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களை அதன் வாயிலில் வாங்குகிறது
8
உள்நாட்டு சரக்கு கட்டணம் மற்றும் சரக்கு ஏற்று/ இறக்கு கட்டணம் துறைமுகத்திலிருந்து உருளை அடைப்பாலை வரை ஆகும் சராசரி போக்குவரத்து கட்டணச் செலவு மற்றும் சரக்கை கப்பலிலிருந்து இறக்கி உருளை அடைப்பாலைக்கு கொண்டு வர ஆகும் ஏற்றுக் கூலி மற்றும் இறக்கு கூலி
9
விற்பனைச் செலவு மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவிற்கான மானியத் திட்டம் 2002ன் படி எரிவாயுவிற்கு அனுமதிக்கப்பட்ட விற்பனைச் செலவு மற்றும் லாபம்
10
விற்பனை லாபம்
11
அடைப்புச் செலவு (உருளை விலை மற்றும் அடைப்பு செலவு) மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவிற்க்கான மானியத் திட்டம் 2002ன் படி 14.2 கிலோ அளவுக்கு உருளையில் அடைப்பதற்கு அனுமதித்த செலவு
13
மத்திய அரசு மானியம் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயுவிற்க்கான மானியத் திட்டம் 2002ன் படிஉருளைக்கு மானியமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ 22.58
14
எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் குறைவசூல் உருளையின் விற்பனை விலைக்கும் அடக்கவிலைக்கும் உள்ள இடைவெளியே குறைவசூல் ஆகும். இதில் கலால் வரி மதிப்புக் கூட்டல் வரி மற்றும் விநியோகஸ்தர் கமிஷன் சேர்க்கப்படவில்லை
16
கலால் வரி சமையல் எரிவாயுவிற்கு கலால் வரி கிடையாது
17
விநியோகஸ்தர் கமிஷன் 11-12-2013முதல் விநியோகஸ்தர் கமிஷனாக உருளை ஒன்றுக்கு ரூ 40.71ஐ மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் நிர்ணயித்திருக்கிறது
18
மதிப்புக் கூட்டுவரி மதிப்புக் கூட்டுவரியானது மாநிலங்கள் விதிக்கும் வரியாகும். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மத்திய விற்பனைவரிச் சட்டப்படி இது 5% வரை நிர்ணயிக்கலாம். டெல்லியில் இது கிடையாது
மேலே அட்டவணையில் கண்டதை விவாதிக்கும் முன்பு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த நிறுவனங்களில் முக்கியமானவை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன். இந்த மூன்று நிறுவனங்களும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களாகும். இவைகள் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை நிர்ணய இயக்கமுறை என்பது இறக்குமதி ஒப்பீட்டு விலையாகும் (IPP). இறக்குமதி ஒப்பீட்டு விலை என்னவென்று மேலே உள்ள அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விலையைக் கணக்கிட்டு விற்பனை செய்து வருகின்றன. எனினும் சமையல் எரிவாயுவிற்கு மட்டும் அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்கின்றன. எனவே அரசு நிர்ணயித்த விலைக்கும் நிறுவனங்கள் கணக்கிடும் விலைக்கும் உள்ள இடைவெளியே குறைவசூலாகும் (Under Recoveries). பெட்ரோலியப் பொருட்களின் விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்பட்டு அந்த விலைக்கு சந்தையில் விற்கப்படுகின்றது. சமையல் எரிவாயு விஷயத்தில் மட்டும் அரசு நிர்ணயித்த விலையில் விற்பதால் குறைவசூல் ஆகிறது. இது உயர்ந்து வருவதால் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள் நஷ்டமடைவதாகக் கூறி பிரசாரம் செய்யப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க, 30-3-2013 முடிய அறிவிக்கப்பட்ட நிதியறிக்கையின் விபரம் வருமாறு
(கோடிகளில்)
வ எண்
நிதி விபரம்
ஐஓசிஎல்
எச்பிசிஎல்
பிபிசிஎல்
1
வருவாய்
4,61,769.77
2,16,154.13
2,42,180.98
2
செலவு
4,53,703.54
2,14,297.09
2,37,971.42
3
லாபம்
8,076.13
1,857.04
4,209.56
4
இதர வருவாய்
3,511.64
1,064.02
1,528.99
5
மொத்த லாபம்
11,587.77
2,921.56
5,738.55
6
நிதிச் செலவு
7,083.52
2,314.98
2,518.29
7
வரி போக இறுதி லாபம்
3627.30
500.49
1,880.83
8
நிதி கையிறுப்பு
60,608.02
13,019.57
16,052.46
இந்த நிறுவனங்கள் குறைவசூலின் விளைவாக நஷ்டத்தில் இயங்கினால் இப்படிப்பட்ட முடிவுகள் வந்திருக்காது. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கவேண்டும் என்பதும நமது விருப்பல்ல. இவைகளை நஷ்டப்படுத்தி தனியாரிடம் ஒப்படைப்பதே தனது கொள்கை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசுகளின் சதியையும் மீறி இவைகள் லாபத்தில் இயங்குகின்றன. எனவே இவைகளின் குறைவசூலுக்கு முதலைக் கண்ணீர் வடிப்பது ஏன் என்பதே நம்முன் உள்ள கேள்வி. இந்த நிறுவனங்கள் சமையல் எரிவாயுவை விற்பனை செய்வதற்காக வாங்கும் கொள்முதல் விலை என்பது இறக்குமதி ஒப்பீட்டு விலையாகும் என்பதை மறந்துவிட முடியாது. இந்த நிறுவனங்களே இறக்குமதியும் செய்கின்றன உள்நாட்டிலும் உற்பத்தியும் செய்கின்றன.  அப்படியானால் உள்நாட்டின் உற்பத்திவிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பாலைத் தொழில் என்பது அதிக மூலதனத்தை குடிக்கக் கூடிய தொழில் ஆகும் இதைத்தவிர இயக்கும் செலவும் அதிகம். நாளொன்றுக்கு ஒரு பீப்பாய் அளவு கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் ஆலை ஒன்றை நிறுவதற்கு 30,000 அமெரிக்க டாலர் செலவாகும் என்று உலகளவில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்தியாவில் நிலைமை வேறு. இந்தியாவில் கட்டுமானம் உற்பத்திச் செலவு ஆகியவை வளர்ந்த நாடுகளை விட மிக மிகக் குறைவு. ஐஓசி நிறுவனம் தன்னுடைய தால்சர் சுத்திகரிப்பாலையை நிறுவுவதற்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் தினக்கூலிகளை பயன்படுத்தியதாகக் கூறுகிறது. இந்தியா சீனாவைத் தவிர வேறெங்கும் இது சாத்தியமில்லை. ஜாம் நகர் ஆலையை உலக விலையில் 50 சதவீதத்திலும் வளர்ந்த நாடுகளில் ஆகும் கட்டுமான காலத்தைவிட பாதி நாட்களில் கட்டி முடித்ததாக முகேஷ் அம்பானி கூறுகிறார். ஆக இந்த ஆலைகளில் உற்பத்திப் பொருட்களின் விலையானது உலக விலையோடு ஒப்பிட முடியாத அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். இருந்தும் ஏன் இறக்குமதி ஒப்பீட்டுவிலையை சுத்திகரிப்பாலை வாயில் விலையாக இந்த நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கின்றன?
இந்தக் கேள்விக்குள் நுழையும் முன் பாரிக் கமிட்டி அறிக்கையை சற்று உற்று நோக்க வேண்டியதிருக்கிறது. 2012-13ம் ஆண்டு அரசு செலவிட்ட மொத்த மானியமான 2,57,654 கோடியில் பெட்ரோலிய பொருட்களின் மானியம் மட்டும் 96,880 கோடி என்று கவலை தெரிவித்திருக்கிறது. பெட்ரோல் டீசல் ஆகியவற்றிற்கு இப்பொழுது மானியம் கிடையாது. சமையல் எரிவாயுவிற்கு 2472.5 கோடி மட்டும் மானியமாக செலவாகிறது. மண்ணெண்ணைக்கு ஒரு தொகை செலவாகிறது. ஆனால் ஆகப் பெரும் தொகை உரத்தொழிற்சாலைக்குப் பயன்படும் நாப்தாவிற்கான மானியத்தில் போய்ச் சேருகிறது. உரத்தின் தேவையை குறைக்க முடியாத நிலையிலும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் வகையிலும் குறைந்த விலையில் உர ஆலைகளுக்கு நாப்தாவை வழங்குவது தவிர்க்க முடியாதது ஆகும். பெட்ரோலியப் பொருட்களுக்கான புதிய மானியக் கொள்கை என்பது 2002ல் அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை எண்ணெய் நிறுவனங்களுக்கு குறைவசூல் என்பது 7,28,463 கோடி என்று பாரிக் கமிட்டி கூறுகிறது. ஆனால் இந்த நிறுவனங்களின் லாபமும் குறையவில்லை அவற்றின் ரிசர்வ் தொகையும் குறையவில்லை. சமையல் எரிவாயு விஷயத்தில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு 1,76,902 கோடியாக குறைவசூல் இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறது. விலை நிர்ணய இயக்கமுறைக்கு அடிப்படையாக இருக்கும் கொள்கை என்பது “வழங்கல் வேண்டலைவிட அதிகமாக இருந்தால் ஏற்றுமதி ஒப்பீட்டு விலையையும், வேண்டல் வழங்கலை விட அதிகமாக இருந்தால் இறக்குமதி ஒப்பீட்டு விலையையும் விலை நிர்ணய அடிப்படையாக அமைய வேண்டும்“ என்று கூறுகிறது.
நமது நாட்டைப் பொறுத்தவரை இரண்டுமே தவறு. சுத்திகரிப்பு திறன் அடிப்படையில் பார்த்தால் வழங்கல் வேண்டலைவிட அதிகமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தியின் அடிப்படையில் பார்த்தால் வேண்டல் வழங்கலை விட அதிகமாக இருக்கிறது. சுத்திகரிப்புச் செலவு என்பது உலக சுத்திகரிப்புச் செலவில் சரிபாதியாக இருக்கும்பொழுது நாம் இறக்குமதி ஒப்பீட்டு விலையை அடிப்படையாக கொள்ள முடியாது. ஒரு காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலை போய் இன்று எண்ணெய் சுத்திகரிப்பு ஆற்றல் வளர்ந்து இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை விற்கும் நிலைக்கு வந்துவிட்டது. 2012-13ல் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் ஆண்டொன்றுக்கு 214 மில்லியன் மெட்ரிக் டன். ஆனால் தேவைப்படும் சுத்திகரிப்புத் திறன் ஆண்டொன்றுக்கு 155 மில்லியன் மெட்ரிக் டன் மட்டுமே.
எனினும் பாரிக் கமிட்டின் கோட்பாடானது மிகச் சரியாக தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் தேடித்தரும் கோட்பாடாகும். இந்த கோட்பாட்டையே விஷய ஆய்வின் அடிப்படையாக (Terms of Reference) அரசு நிர்ணயித்திருக்கிறது என்றாலும், இக்கமிட்டியானது அதைவிட ஒரு படி மேலே செல்கிறது என்பதை நாம் பாக்கத் தவறிவிடக் கூடாது.  ஆக நமது நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் ஒவ்வொரு சுத்திகரிப்பு ஆலையின் வாயிலுக்கு வருவதற்கு சரியாக எவ்வளவு செலவாகிறதோ அதன் அடிப்படையிலேயே நிர்ணயிக்க வேண்டும். இதில் அதிக உற்பத்திச் செலவாகும் ஆலையைக் (புதிய ஆலைகள்) கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட ஏற்றுமதி ஒப்பீட்டு விலையை விட குறைவாகவே இருக்கும். ரிலயன்ஸ் நிறுவனம் உலகச் சந்தையில் அதிக விலைக்கு விற்க வாய்ப்பிருப்பதால் அதே விலையை இந்திய விலையாக நிர்ணயிப்பது அநியாயம். ரிலயன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்தால் அதிக விலை கிடைக்கும் என்பதால் அதே விலையை இந்தியாவிலும் இருக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாக நிர்ணயிக்கப்படுகிறது. உண்மையிலேயே கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் வாங்கி சுத்திகரிப்பாலை கட்டி சுத்திகரித்து, குறிப்பிட்ட லாபமும் சேர்த்து விற்கும் விலையை விட சர்வதேச சந்தையில் அதிக விலை கிடைத்தால் அதையே இந்திய விலையாக நிர்ணயித்து  சர்வதே சந்தை விலைக்கும் இந்திய விலைக்கும் உள்ள இடைவெளியை. அதாவது கொள்ளை லாபத்தில் ஏற்படும் குறை லாபத்தையே குறைவசூல் என்று நாமகரணம் சூட்டி இந்திய மக்க்ளுக்கு நாமம் இடப்படுகிறது. ஆகவே இதர பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்றுமதி ஒப்பீட்டு விலையை நிர்ணயிப்பதும் மோசடியாகும்.
சமையல் எரிவாயுவிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கொள்கை என்பது இறக்குமதி ஒப்பீட்டு விலையாகும். அதாவது சர்வதேச சந்தையில் என்ன விலை நிலவுகிறதோ அந்த விலையே இந்திய விலையாக இருக்க வேண்டும் என்பதே அது. இதுவும் அநியாயமான கொள்கையாகும். மொத்த உள்நாட்டுத் தேவையில் 22% சதவீதமே இறக்குமதி செய்துவிட்டு 100 சதவீத்த்திற்கும் இறக்குமதி விலையை நிர்ணயிப்பது என்பது மோசடியாகும். 78% சதவீதம் உள்நாட்டு உற்பத்திக்கு ஒரு நியாயமான லாபத்தை நிர்ணயித்து விநியோகிக்கப்படுவதை தவிர்த்து இறக்குமதி விலையின் அளவிற்கு அதை ஏற்றிவிட்டு அரசு ஒரு விலையை நிர்ணயித்து அந்த விலையானது இறக்குமதி விலையை விட குறைவாக இருப்பதால் குறைவசூல் ஆகிறது என்று வருடந்தோறும் கூக்குரலிட்டு, கமிட்டிகள் அமைத்து, அந்த தொகையை உண்மையிலேயே மக்களிடமிருந்து வசூல் செய்யும் ஏற்பாடு என்பதும் அசிங்கமான நாடகமாகும். அரசு நிர்ணயித்த விலையானது இந்த 78% உற்பத்தியால் கிடைக்கும் சமையல் எரிவாயுவிற்கு  கொள்ளை லாபம் ஏற்படுத்தித் தருவதால்தான் குறைவசூல் இருந்தும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் நிதியறிக்கையில் லாபத்தையும் அதிகரித்துக் கொண்டே வரும் நிதிகையிருப்புத் தொகையும் பார்க்க முடிகிறது, உள்நாட்டு உற்பத்தியும் இறக்குமதியும் கொண்ட விபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் இருக்கிறது.
ஆயிரம் டன்களில்

2011-12
2012-13
2013-14
2014-15
சமையல் எரிவாயுத் தேவை
14920
16140
17418
18680
எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிவிகிதம்
8%
8.1%
7.9%
7.3%
உள்நாட்டு உற்பத்தி



சுத்திகரிப்பு ஆலைகள்
5963
6903
7033
7513
எரிவாயு உடைப்பாலைகள்
2112
2112
2112
2112
ரிலயன்ஸ்
2500
2000
2000
2000
எஸ்ஸார்
800
800
2000
2000
மொத்த உற்பத்தி
11375
11815
13145
13625
தேவைப்படும் இறக்குமதி
3545
4325
4273
5055
ஆதாரம்: பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம்.
(இருவேறு ஆவணங்களில் புள்ளிவிபரங்கள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் விவாதத்திற்கு இது போதுமானது)
இறக்குமதி/உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தின் அரசியல்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அதிக விலைதான். உள்நாட்டு விலையோ குறைவுதான். ஆக ஒரு அரசானது உள்நாட்டில் அதிக உற்பத்தி செய்து வெளிநாட்டு சமையல் எரிவாயுவை சார்ந்திராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேடல் என்பது முற்றுப்பெறாத விஷயமாகும். இந்தத் தேடலை மும்முரப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் கொள்கையே 1998ம் ஆண்டின் புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கை (NELP – New Exploration and Licensing Policy) இக்கொள்கை பற்றியும் அது செயல்படும் விதம் பற்றியும் விரிவாக விவாதிக்க வேண்டியதிருக்கிறது. புதிய தேடல் கொள்கையை வைத்து புதிய வளங்களை கண்டுபிடித்து அவற்றை பயன்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்கி அரசின் செயல்திட்டங்களான விஷன்-2015 மற்றும் ராஜீவ் காந்தி கிராமப்புர சமையல் எரிவாயு விதாரன் யோஜனா மற்றும் 2011-16 தொலைநோக்குத் திட்டம், பாரிக் கமிட்டி பரிந்துரைப்படி குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு கொடுத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், அதுவரையில் சாமானியனுக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவைக் கிடைக்கச் செய்வதை உத்தரவாதப்படுத்துவதற்காக ஒரு இடைக்காலத் திட்டமாவது வேண்டாமா?
அந்த இடைக்காலத் திட்டத்தில் நமது நாட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான ஒரு முன்னுரிமைக் கொள்கை வேண்டும். முன்னுரிமையை வரிசைப்படுத்தினால் முதலில் சமையல் எரிவாயுவும். இரண்டாவது போக்குவரத்து எரிபொருளும் மூன்றாவதாக உரஆலைகளுக்கான மூலப்பொருளும் என்ற அடிப்படையில் அமைய வேண்டும். அடுத்தது பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், செயற்கை ரப்பர் ஆலைகள். செயற்கை இழை ஆலைகள் என்ற வரிசையில் கடைசியாகத்தான் மின் உற்பத்தி இடம்பெற வேண்டும். இவற்றின் விலைகளும் முன்னுரிமை அடிப்படையில் முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும். எரிவாயுவைப் பயன்படுத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும். மின் உற்பத்திக்கான மாற்று வழிகளைத் தேட வேண்டும். இதை செயல்படுத்தும் விதமாகவே உற்பத்தி கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும்.  ஏற்கனவே குறிப்பிட்டபடி சுத்திகரிப்பு ஆலைகளில் 3% கச்சா எண்ணையானது சமையல் எரிவாயுவாக மாறுகிறது. எனினும் அதே சுத்திகரிப்பு ஆலையில் உற்பத்திப் பண்டங்களின் உட்சேர்மானத்தை ஓரளவிற்கு மாற்ற முடியும். அப்படி மாற்றுவதன் மூலம் கச்சா எண்ணெயில் 40% வரைக்கும் சமையல் எரிவாயுவாக மாற்ற முடியும். இயற்கை எரிவாயுவை கிணற்றிலிருந்து எடுக்கும்பொழுது முன்சுத்திரிப்பாக சமையல் எரிவாயுவை பிரித்தெடுக்க முடியும். பிரிதெடுக்கப்படும் அளவையும் மாற்றியமைக்க முடியும். இங்கும் 40 சதவீதம் அளவிற்கு சமையல் எரிவாயுவை பிரித்தெடுப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த இரண்டு வழிகளிலும் தேவைப்படும் சமையல் எரிவாயுவை தேவையில் 80% குறையாமல் உள்நாட்டிலேயே உற்பத்தியாவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். 20% சதவீதத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து சராசரி விலையை கணக்கிட்டால் குறைவசூலும் வராது மானியமும் தேவைப்படாது. தேவை அதிகரிக்க அதிகரிக்க புதிய வளங்களை சேர்க்கும் முகமாக தேடல் கொள்கை இருக்க வேண்டும்.
நாட்டின்  கேந்திரமான வளமாக இருக்கும் எரிவாயு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை மேலே உள்ள படத்தில் காணலாம். மொத்த எரிவாவுவில் 4 சதவீதம்தான் சமையல் எரிவாயுவாக பயன்படுகிறது. 40 சதவீதம் கொதிகலன்களில் எரித்து மின்சாரமாக்கப்படுகிறது. இது கட்டாயம் மாற்றப்பட வேண்டிய பயன்பாட்டு முறையாகும். இதில் சமையல் எரிவாயுவிற்கு அதிக முன்னுரிமை கொடுத்தால் இறக்குமதி சார்பு குறையும். உரத்தயாரிப்பிற்கும் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். தற்போது கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படப் போவதாக தெரியவில்லை. 2030-31ம் ஆண்டில் நாட்டின் ஆற்றல் சேவையில் 22% எரிவாயு மூலமாக கிடைக்கும் என்று மத்திய ஆற்றல்துறை கூறுகிறது. அதாவது இன்று இருக்கும் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி 4 லட்சம் மொகாவாட்டாக மாறும் பொழுது 22% அதாவது 88,000 மெகாவாட் மின்சாரம் எரிவாயு மூலமாகவே உற்பத்தி செய்யப்படவிருக்கிறது.
I

No comments:

Post a Comment