Monday, January 13, 2014

GAS

எரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை (3)

புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கை
ஜனநாயகம் என்பதற்கு ‘’மக்களின், மக்களால், மக்களுக்காக’’ (of  the People, by the People, for the people) என்ற ஒரு விளக்கமிருக்கிறது. இதே போன்ற விளக்கத்தை NELP-க்கு கொடுக்கச் சொன்னால் அது “ரிலயன்ஸின், ரிலயன்ஸால், ரிலயன்ஸுக்காக“ என்பதைத் தவிற வேறெதுவாகவும் இருக்க முடியாது. இக்கொள்கை செயல்படுத்தத் துவங்கி ரிலயன்ஸ் ஊழல் நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரியால் வெளிக் கொணரப்பட்டு அது நீர்த்துப் போய்விட்டது. ரிலயன்ஸ் நிறுவனம் இந்திய மக்களின் பொது சொத்தான ஆழ்கடல் எண்ணெய்/எரிவாயுக் கிணறுகளிலிருந்து கொணரும் எரிவாயுவிற்கு நிர்ணயிக்கப்படும் விலையானது அதன் கொள்ளை லாபத்தை உறுதிப்படுத்துகிறது. சற்று விபரமாக பார்ப்போம்
1998ம் ஆண்டின் புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கையின் கூறுகள்
  • அன்னிய நிறுவனங்கள் 100% உடமை கொள்ளலாம்
  • நிறுவனங்கள் எண்ணெய்/எரிவாயுவை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ விற்கலாம்
  • தேசிய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டு அவசியமில்லை
  • உற்பத்தி ஆரம்பமான பின் 7 ஆண்டுகளுக்கு வரி விடுமுறை
  • இறக்குமதி செய்யும் பொருளுக்கு சுங்கவரி கிடையாது
  • உற்பத்தியை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு உடன்பாடு
நமது  நாட்டின் எண்ணெய்-எரிவாயு படிமானத்தை வகைப்படுத்தியதில் மேலே உள்ள  வரைபடம் வருகிறது. இது 3.14 மில்லியன் ச.கிமீ பரப்பளவு கொண்டது
இந்த படிமான வரைபடத்தைத்தான் துண்டு போட்டு ஒவ்வொரு சுற்றுக்களிலும் குறிப்பிட்ட அளவு துண்டுகளை வட்டங்கள் (Blocks) என்றழைக்கப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகின்றன. இதுவரை பத்து சுற்றுகள் முடிந்துவிட்டன ஓன்பது சுற்றுக்க்ளின் விபரம் வரைபடத்தில் உள்ளது.

  • 9 சுற்று  NELP  முடிந்துள்ளது.
  •   254 வட்டங்கள் கையளிக்கப் பட்டுள்ளன
  • 1.234 மில்லியன் ச.கிமீ பரப்பு இதில் அடங்கும்
  • ஜனவரியில் 10 வது சுற்று
  • 10வது சுற்றில் 68 வட்டங்கள் திறக்கப்பட இருக்கிறது
  • நிலம், ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகள்  அடங்கும்
  • தனியார் நிறுவனங்கள் முன்னணி
  • அரசு நிறுவனமான ONGC  இன்னும் களத்தில் இருக்கின்றது
  • கண்டுபிடிப்புகளில் பாதிக்கு மேல் ரிலயன்ஸ் நிறுவனம் கையில்
 இதுவரை நடந்த தேடல்களில் நடந்த கண்டுபிடிப்புகள்
நிறுவனங்கள்
கண்டுபிடிப்புகள்
நிறுவன வகை
British Gas Explo. & Prod.India Ltd.
2
வெளிநாட்டு நிறுவனம்
Cairn Energy India Pty.Ltd.
28
வெளிநாட்டு நிறுவனம்
Essar Oil Ltd.
5
தனியார் நிறுவனம்
Focus energy Ltd.
2
தனியார் நிறுவனம்
Gujarat State Petroleum Corporation Ltd.
22
மாநில பொதுத்துறை
Hardy Exploration & Production (India) Inc.
1
வெளிநாட்டு நிறுவனம்
Hindustan Oil Exploration Company Ltd.
2
தனியார் நிறுவனம்
INTERLINK
1
தனியார் நிறுவனம்
Jubilant Oil & Gas Pvt. Ltd.
5
தனியார் நிறுவனம்
NAFTOGAZ
1
வெளிநாட்டு நிறுவனம்
Niko Resource Ltd.
2
வெளிநாட்டு நிறுவனம்
Oil & Natural Gas Corp. Ltd.
17
மத்திய பொதுத்துறை
Reliance Industry Ltd.
48
தனியார் நிறுவனம்
இந்த நிலை தொடர்ந்தால் 2016-17ம் ஆண்டு உற்பத்தியில் 63% ரிலயன்ஸ் நிறுவனம் கையில் போய்விடும் அரசு நிறுவனம் 30% பிற தனியார் நிறுவனங்கள் 7% பங்கு வகிக்கும். அந்த நிலையில் எண்ணெய் விற்பனை நிலையங்களும் உற்பத்தி நிலையங்களும் தனித்தனியாக இயங்கும் சூழ்நிலை உருவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குறைவசூல் போன்றவைகள் இருக்க முடியாது. விற்பனை நிலையங்கள் உற்பத்தி நிலையங்கள் கேட்கும் தொகைக்குதான் கொள்முதல் செய்ய முடியும். புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்யில், கண்டுபிடிக்கப்படும் பெட்ரோலிய வளங்களை கண்டுபிடிக்கும் நிறுவனமே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றும் அவைகள் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ விற்கலாம் என்றிருப்பதால்தான் அவர்கள் வெளிநாட்டில் என்ன விலைகிடைக்.குமோ அதே விலையைக் கொடுத்திட சமையல் எரிவாவுவின் விலை நிர்ணயத்தில் இறக்குமதி ஒப்பீட்டு விலையையும் இதர பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்றுமதி ஒப்பீட்டு விலையையும் நிர்ணயிக்க வேண்டும் என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க இந்த தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் எந்த விகிதத்தில் அரசிடம் பகிர்ந்து கொள்ளும் எப்படிப்பட்ட பகிர்தல் இருக்கும் என்பதும் கொஞ்சம் கவலையளிக்கும் விஷயமாகும். கிடைக்கும் எண்ணெய்/எரிவாயு இரண்டாகப் பிரிக்கப்படும். முதல் பகுதி செலவுப் பெட்ரோலியம் எனவும் இரண்டாம் பகுதி லாபப் பெட்ரோலியம் எனவும் கூறப்படும். செலவுப் பெட்ரோலியம் என்பது கிடைக்கும் பெட்ரோலியத்தில் கட்டமைப்பு மூலதனம், உற்பத்திச் செலவு, உரிமம் ஆகியவற்றிற்கான பங்கு. லாபப் பெட்ரோலியம் என்பது மொத்தப் பெட்ரோலியத்திலிருந்து செலவுப் பெட்ரோலியத்தைக் கழித்தால் கிடைப்பது. லாபப் பெட்ரோலியத்தில் அரசின் பங்கு என்ன என்பதற்கு மற்றொரு சமன்பாடு உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் இன்னும் சில கலைச் சொற்களை புரிந்து கொள்ள வேண்டும்.
முதலீட்டு விரிப்புவிகிதம் (Investment Multiple Ratio) என்பது மறு திரட்டு செய்த கட்டமைப்பு செலவிற்கும் கட்டமைப்புச் செலவிற்கும் உள்ள விகிதம் இதை IM என்று குறிப்பிட்டால். லாபப் பெட்ரோலியத்தில் அரசின் பங்கு என்பது லாபப் பெட்ரோலியத்தையும் முதலீட்டு விரிப்புவிகிதத்தையும் பெருக்கினால் கிடைப்பது.
கணித சமன்பாட்டு வடிவில் கொடுக்க வேணடுமென்றால்,
மொத்த பண வருவாய் (Net Cash Income) =  ஒப்பந்தகாரரின் வருட வருவாய் – (உற்பத்திச் செலவு + ஆதாய உரிமத் தொகை(Royalty))
ஒப்பந்தகாரரின் வருட வருவாய் = பெட்ரோலியத்தின் விற்பனை வருவாய் + லாபப் பெட்ரோலியத்தில் ஒப்பந்தகாரரின் பங்கு
முதலீட்டு விரிப்புவிகிதம் = ஒப்பந்தகாரரின் வருட வருவாய் / ஒப்பந்தகாரரின் வருட முதலீடு
ஒப்பந்தகாரரின் வருட முதலீடு = அந்த ஆண்டுவரை திருப்பி எடுக்கப்படாத மீதமிருக்கும் முதலீடு
லாபப் பெட்ரோலியத்தில் அரசின் பங்கு = லாபப் பெட்ரோலியம் X முதலீட்டு விரிப்பு விகிதத்தினடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட படிமுறைவீதம்
முதலீட்டு விரிப்பு விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்ட படிமுறைவீதம் (Slab Rate on the basis of Investment Multiplier) என்பது ஒப்பந்தத்துக்கு ஒப்பந்தம் வேறுபடும்.
கொஞ்சம் நுணுகிப் பார்த்தால் விஷயம் என்னவென்று பிடிபடும். உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் ஒப்பந்தகாரர் திருப்பி எடுக்க வேண்டிய முதலீடு அதிகம் இருக்கும் எனவே முதலீட்டு விரிப்புவிகிதம் குறைவாகவே இருக்கும் (பின்னத்தின் கீழ் எண் அதிகமாக இருப்பதால்) ஆகவே அரசுக்கு கிடைக்கும் லாபமும் குறைவாகவே இருக்கும். தப்பித்தவறி அதிகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு படிமுறைவீதமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோலியம் கண்டுபிடித்த பிறகு லாப பங்கீடு ஒப்பந்தம் போடும் பொழுது இந்த படிமுறைவீதத்திலும் புகுந்து விளையாடி அரசுக்கு ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம். இதுதான் ரிலயன்ஸ் விஷயத்தில் நடந்தது. இதைத்தவிர ஆண்டுகள் செல்லச் செல்ல முதலீட்டு விரிப்புவிகிதம் கூடினாலும், கிணறு வற்றி அதிலிருந்து பெட்ரோலியத்தை எடுக்கும் செலவு அதிகமாவதால் அப்பொழுதும் அரசின் லாப பங்கு குறையும்.
ரிலயன்ஸ் விஷயத்தைப் பார்த்தால், முதலாவதாக ரிலயன்ஸுக்கு வளமான வாய்ப்புள்ள வட்டங்கள் கொடுக்கப்பட்டன. இரண்டாவது அது அதீதமான தேடுதல் செலவைக் காட்டி செலவுப் பெட்ரோலியத்தை கூட்டிக் காண்பித்து லாபப் பெட்ரோலியத்தை குறைத்தது. மூன்றாவது படிமுறைவீதத்தையும் அவர்களுக்கு லாபம் தரும் வகையில் நிர்ணயித்திருந்தார்கள். D-6 என்ற எண்ணெய் வயலில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலியத்தை எடுத்து விற்பனை செய்ய ஆகும் கட்டமைப்புச் செலவு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்று 2004ல் ஒப்பந்தம் கோரிவிட்டு 2006ல் அதை 8.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தியது. இது எல்லாவற்றுக்கும் மேலாக கிணற்றங்கரை எரிவாயுவிற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையானது அரேபிய நாட்டில் ஒரு கிணற்றிலிருந்து எரிவாயுவை விலைக்கு வாங்கி அதை கோதாவரி எண்ணெய்க் கிணறுவரை கொண்டுவர என்ன செலவாகுமோ அதையே விலையாக நிர்ணயித்தார்கள். நமது நாட்டின் வளம் நமது மக்களுக்கு விநியோகிப்பதற்கு எதற்கு சரக்கு மற்றும் காப்பீட்டு கட்டணத்துடன் கூடிய இறக்குமதி ஒப்பீட்டு விலை? சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம் என்பது வேண்டல்-வழங்கல் அடிப்படையில் மாறிவருகிறது. இது எப்படி நமது நாட்டிற்கு பொருந்தும். நியாயமான முதலீட்டு செலவுகளையும் இயக்கச் செலவையும் கணக்கிட்டு அதில் பதினைந்து சதம் லாபம் வைத்து விலை நிர்ணயிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இப்படியாக ரிலயன்ஸ் நிறுவனத்தின் மூலதனம் பெருகுவதற்கு இந்திய மக்களின் பொதுவளமானது காவு கொடுக்கப்பட்டது.
இறுதியாக
மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு என்பது அடிப்படை வாழ்வு சாதனப் பொருளாகிவிட்டதால் அது மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்கு அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இன்னும் 50 சதவீத மக்கள் விறகையே பயன்படுத்தி வரும் அவலத்தைப் போக்க அரசின் திட்டங்கள் மும்முரப்படுத்த வேண்டும். எனினும் வாங்கும் சக்தி இல்லாத மக்களிடம் முதுகெலும்பை முறிக்கும் விலையில் சமையல் எரிவாயுவை கொடுத்தால் அரசின் இலக்கு எப்படி நிறைவேறும்? நடுத்தர மக்களுக்கு வாங்கும் சக்தி இருக்கிறது என்பதால் அவர்களிடம் அவர்கள் வாங்கும் சமையல் எரிவாயுவின் மதிப்பைவிட அதிக விலைக்கு விற்று வருவது மோசடியான நடவடிக்கையாகும். உலகமயமாக்கல் கட்டத்தில் கூட்டுபேர உரிமை நசுக்கப்பட்டுவிட்டதால் பணவீக்கத்திற்கு தகுந்தாற்போன்ற ஊதிய உயர்வு இல்லாமல் உண்மை ஊதியம் குறைந்து வரும் சூழலில் முதுகெலும்பை முறிக்கும் விலையை கொடுக்கச் செய்வது இந்த அரசு ஒரு சேமநல அரசா என்ற  கேள்வியை எழுப்புகிறது.
சமையல் எரிவாயு விஷயத்தில் இறக்குமதி ஒப்பீட்டு விலை இயக்க முறையை உடனடியாக கைவிட வேண்டும். 78% உள்நாட்டு உற்பத்தியில் 15%-20% வரை லாபம் வைத்து விலை நிர்ணயம் செய்து இறக்குமதி உள்ளிட்ட மொத்தச் செலவின் சராசரியே விலையாக நிர்ணயிக்க வேண்டும். இந்த விலையும் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டினால் நுகர்வோரின் வருமானத்திற்கு தகுந்தாற் போன்ற மானியத்தைக் கொடுக்கலாம். இறக்குமதி உள்நாட்டு உற்பத்தி, விகிதம் அதிகமாக்காமல் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் இருக்கும் சுத்திகரிப்பாலைகளையும் வாயுஉடைப்பாலைகளையும் (Gas Fractionators) சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக இயக்க வேண்டும். புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனடிப்படையில் போடப்படும் லாப பங்கீடு ஒப்பந்தங்களும் ஒருதலைபட்சமாக இருப்பதை மாற்ற வேண்டும். புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கையின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட வளங்களில் செய்யப்படும் உற்பத்திப் பொருளுக்கு இறக்குமதி ஒப்பீட்டு விலை நிர்ணயிப்பதை ரத்து செய்ய வேண்டும். இந்திய எண்ணெய்./எரிவாயு கிணற்றங்கரை விலை என்பது கிணற்றங்கரைக்கு பொருளை கொண்டுவருவதற்காக உண்மையிலேயே செய்யப்பட்ட செலவின் அடிப்படையில் இருக்க வேண்டும். வேண்டல்-வழங்கல் கோட்பாடு செயல்படுவதை அனுமதிக்கக் கூடாது. பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டு முன்னுரிமைக் கொள்கை அறிவிக்கப்பட வேண்டும். அது கேந்திர வளமான எரிவாயுவை எரித்து மின்சாரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்தக் கூடாது.
இந்திய மக்களை ஏழ்மை கல்லாமை, நோய் நொடிகளிலிருந்து விடுதலை செய்ய பயன்பட வேண்டிய செல்வ வளங்கள் தனியாரிடம் கொள்ளை போவது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.



1 comment:

  1. A must read article for present political social scenario. Hats off to the Author.

    ReplyDelete