15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
அமெரிக்காவில் குறைந்த பட்சக் கூலியை உயர்த்துவதற்காக நடந்து வரும் தொழிலாளர் போராட்டங்கள், அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும் அசைத்துப் பார்த்திருக்கின்றன.
மெக்டொனால்ட்ஸ் முதலான துரித உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி 2013-ம் ஆண்டு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். 2013 நவம்பர் மாதம் மேற்குக் கடற்கரையில் உள்ள வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சியாட்டில் மாநகருக்கு அருகில் உள்ள சீ-டேக் என்ற நகராட்சி மன்றம், மக்கள் வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்தியது.
ஜனவரி மாதம் சியாட்டில் நகராட்சி உறுப்பினர் தேர்தலில் 15 ஆண்டுகளாக மாநகராட்சி உறுப்பினராக இருந்த ரிச்சர்ட் கான்லின் என்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சோசலிச மாற்று (சோசலிஸ்ட் அல்டர்நேடிவ்) கட்சியைச் சேர்ந்த சாமா சாவந்த் “மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி” என்ற முழக்கத்தை மையமாக வைத்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரும் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $15 ஆக உயர்த்துவதை ஆதரித்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான துணைக்குழுவை நியமித்திருக்கிறார். நகர மக்களில் 68% பேர் எந்த விதிவிலக்கும் இல்லாமல் உடனடியாக இந்த கூலி உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருவதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இப்போது, சியாட்டில் நகரத்தில் மணிக்கு $15 கூலி என்ற கோரிக்கையை எதிர்த்து வாய் திறப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் துணிச்சல் இல்லை.
ஆனால், “வழக்கம் போல சமூகத்தின் 1%-த்தினரான முதலாளிகளும், அவர்களுக்கு ஆதரவான மாநகராட்சி உறுப்பினர்களும் இந்த நடைமுறையில் விதிவிலக்குகளையும் ஓட்டைகளையும் புகுத்துவதோடு மட்டுமல்லாமல், கால வரம்பையும் தள்ளிப் போட முயற்சித்து வருவதாக” சாமா சாவந்த் குற்றம் சாட்டியிருக்கிறார். “நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
“விதிவிலக்கு கூடாது, ஓட்டைகள் கூடாது, தாமதம் கூடாது, இப்போதே 15 டாலர் வேண்டும்” என்ற முழக்கத்துடன்
- உடனடியாக கூலி உயர்வு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் – நமது வீட்டு வாடகைகள் கொடுப்பதை இனியும் தள்ளிப் போட முடியாது
- கூலி உயர்வை எந்த விதிவிலக்கும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் – சிறு நிறுவனங்களை பாதுகாப்பது முக்கியமானது என்றாலும் அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அடமானம் வைத்து செய்யப்படக் கூடாது.
- டிப்ஸ் தொகையை சேர்க்காமல் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட வேண்டும்
இந்த போராட்டங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஆளும் வர்க்கங்களை அசைத்துப் பார்த்துள்ளது. அதிபர் ஒபாமா, மத்திய அரசின் எதிர்கால ஒப்பந்ததாரர் பணிகள் அனைத்திலும் குறைந்த பட்ச கூலி மணிக்கு $10.10 ஆக இருக்க வேண்டும் என்று நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இந்தக் மோசடியான உத்தரவு அளிக்கும் கூலி உயர்வு, தொழிலாளர்களின் கோரிக்கையான மணிக்கு $15-ஐ விட குறைவானது என்பது மட்டுமின்றி, இது அமெரிக்க மத்திய அரசின் ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது.
இந்த ஆண்டு பிற்பகுதியில் வரவிருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் குறைந்தபட்ச ஊதியத்தை நாடு முழுவதும் $10.10 ஆக உயர்த்துவதை தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், உழைக்கும் மக்களின் பிரச்சனையை பேசி ஓட்டுப் பொறுக்கி விட்டு அக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு எதுவும் செய்யாமல் ‘குடியரசுக் கட்சியினர் ஒத்துழைக்கவில்லை’ என்று நாடகமாடுவதுதான் ஜனநாயகக் கட்சியின் நடைமுறையாக உள்ளது.
குடியரசுக் கட்சியினரோ, ‘குறைந்த பட்ச கூலி என்பது அடிப்படை திறன் தேவைப்படும் வேலைக்கான கூலி. அவரவர் திறமைக்கு ஏற்ப பின்னர் கூடுதல் சம்பாதிக்க முடியும்’ என்று “மெரிட்” வாதம் புரிகின்றனர். ‘குறைந்த பட்ச கூலியை உயர்த்திக் கொடுத்தால் விலைவாசி கணிசமாக உயரும்’ என்றும் ‘பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்படும்’ என்றும் பயமுறுத்துகின்றனர்.
கலிபோர்னியாவின் ஓக்லாந்து நகரின் மேயர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் டான் சீகல் $15 கூலி சட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் சூழலில் அந்த ஊரின் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு, ‘குறைந்தபட்சக் கூலி $12.25 ஆக உயர்த்தப்பட வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. அதாவது முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே தொழிற்சங்கங்கள் தமது சமரச வேலையை ஆரம்பித்திருக்கின்றன. ஜனநாயகக் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த சங்கங்கள், அக்கட்சிக்கு ஏற்புடையதாக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போக வைக்கின்றன.
“$15 என்ற கோரிக்கையின் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கே வர மாட்டோம்” என்று தேசிய உணவகங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்காட் டீ ஃபீபே மிரட்டியிருக்கிறார். “அமெரிக்காவில் தொழில்துறை நலிந்த நிலையில் துரித உணவு மற்றும் சேவைத் துறைகளில்தான் வேலை வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அந்தத் துறைகளில் கூலியை உயர்த்தி வேலை வாய்ப்புகளை குறைப்பது முட்டாள்தனம்” என்று தேசிய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் மூத்த துணைத்தலைவர் டேவிட் பிரெஞ்ச் குமுறியிருக்கிறார்.
ஆனால், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு $15 ஆக உயர்த்துவதன் மூலமாக துரித உணவுகளின் விலை 10% மட்டுமே உயரும் ($3 மதிப்பிலான பர்கர் விலை $3.30 வரை உயரலாம்) என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கென் ஜேக்கப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆய்வின்படி பற்றாக்குறை கூலி பெறும் துரித உணவு ஊழியர்கள் ஆண்டுக்கு $7 பில்லியன் அரசு உதவி பெறுகிறார்கள். கூலி உயர்வின் மூலம் ஊழியர்கள் அரசு மானியங்களை நாடுவதை குறைத்துக் கொண்டு அரசுக்கு பணம் மிச்சமாகும். ஆனால் முதலாளிகளின் பணத்தை சேமிப்பதற்கு மட்டும் அரசு மானியங்கள் கொடுக்கிறது. உண்மையில் இது மக்களின் நலனுக்காக கொடுக்கப்படுவது இல்லை.
மேலும், “கடந்த 90 ஆண்டு அனுபவத்தில் கூலி உயர்வு வழங்கியதால் வேலை வாய்ப்புகள் குறைந்ததாக சரித்திரமே இல்லை” என்று தேசிய சேவைத்துறை தொழிற்சங்கத் தலைவர் திருமதி ஹென்ரி கூறுகிறார். முதலாளிகள் தமது லாப வேட்டையை அதிகரிப்பதற்காக முதலீடுகளை நாடு விட்டு நாடு கொண்டு போவதாலும், வேலைகளில் எந்திரங்களை புகுத்தி தானியக்கத்தை செயல்படுத்துவதாலும்தான் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பல துரித உணவகங்கள் ஏற்கனவே குளிர்பானங்கள் வாங்குவதில் சுயசேவை முறையை ஆரம்பித்திருக்கின்றன. கணினி திரையில் வாடிக்கையாளரே ஆர்டர் கொடுத்து சமையலறைக்கு தகவல் போவது என்ற முறையையும் செயல்படுத்தியிருக்கின்றன. எனவே, கூலி உயர்வுதான் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்ற வாதமும் தவறானது.
1930-களின் பொருளாதார பெருமந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் முதன்முதலாக குறைந்த பட்ச ஊதியம் மணிக்கு $0.25 ஆக வரையறுக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் இன்றைய மதிப்பு $4.13. படிப்படியாக உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் 1968-ல் உச்சபட்ச மதிப்பான $1.60 (இன்றைய மதிப்பு $10.72)-ஐ எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து இன்று $7.25 ஆக உள்ளது. அதாவது 1968-ஐ விட இப்போது 32% குறைவாக உள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தில் தற்போதைய குறைந்த பட்ச கூலி பெறும் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கும் $19,385 டாலர் ஆண்டு வருமானத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருப்பது கூட சாத்தியமில்லை. சியாட்டிலில் வாடகைக்கு வீடு எடுக்கவும் பிற அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் போதுமான ஆண்டு வருமானம் $31,000-ஐ பெறுவதற்காக மணிக்கு $15 குறைந்த பட்ச கூலி கேட்டு தொழிலாளர்கள் போராடுகின்றனர்.
“நியாயமான கூலி கொடுக்காமல் மோசடி செய்யும் மெக்டொனால்ட்சை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தோடு, “பாய்காட் மெக்பாவர்ட்டி” (மெக்வறுமையை புறக்கணிப்போம்) என்ற பெயரில் சியாட்டில் நகரில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடைகளுக்கு முன்பு பிப்ரவரி 20-ம் தேதி மறியல்கள் நடைபெற்றன.
அந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டானி பெல்ப்ஸ் என்ற ஊழியர், “மணிக்கு $9.32 ஊதியத்தில் ஒரு குழந்தையை வளர்க்கும் அனுபவம் எப்படியானது என்று தெரியுமா? அது மிக மிகக் கொடுமையானது. நான் வேலைக்குப் போகும் போது குழந்தையை பராமரிக்கும் சேவை, குடியிருப்பதற்கு வீடு, மருத்துவ வசதி என எதுவும் கட்டுப்படி ஆவதில்லை. மாறாக 2 படுக்கையறை, 1 குளியலறை கொண்ட வீட்டை 7 பேருடன் பகிர்ந்து கொண்டு என் குழந்தையுடன் நான் வசிக்கிறேன். வாழ்வின் குறைந்த பட்ச தேவைகளை பெறுவதற்காக நான் $15 குறைந்தபட்ச ஊதியம் கோரி போராடுகிறேன்.” என்றார்.
மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனையை அதிகரிப்பதற்கான உத்தியாக வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பர்கர் அல்லது வறுவலை கேட்ட அளவை விட அதிகரிக்கட்டுமா (super size your order) என்று ஊழியர்களை கேட்க வைக்கும் வழக்கத்தை பின்பற்றி “என் ஊதியத்தை உடனே பெரியதாக்கு ((super size my salary now)” என்ற முழக்கம் தெருவை நிறைத்தது. அடுத்தக் கட்ட போராட்டமாக மார்ச் 7 முதல் 15 வரையிலான வாரத்தை நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தும் “நடவடிக்கை வாரமாக” கடைப்பிடிக்கப் போவதாக தொழிலாளர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த மறியல் போராட்டங்களால் கதி கலங்கிய உள்ளூர் மெக்டொனால்ட்ஸ் உணவக முதலாளிகள், ‘ஊதிய உயர்வு கொடுப்பதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை’ என்று அறிவித்திருக்கின்றனர். இந்தப் போராட்டங்களின் தாக்கம் வாஷிங்டன் மாநிலம் முழுவதும் எதிரொலித்துள்ளது. மாநில ஆளுனர் குறைந்த பட்ச கூலியை மணிக்கு $13 ஆக அதிகரிப்பதை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.
போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கம் தனது நலன்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது அமெரிக்க தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டம் நமக்கு உணர்த்தும் உண்மை.
No comments:
Post a Comment