Wednesday, February 26, 2014

சிந்தனைக்கு  சில வார்த்தைகள்:

# இன்சூரன்ஸ், வங்கி ஆகிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் எழுதினார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்லும் பலர் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை...

#விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விதர்பா பகுதியின் அவுரங்காபாத் நகரில் ஒரே நாளில் 152 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் விற்பனையாகியிருக்கிறது. பென்ஸ் கார் வாங்க 7 % வட்டியில் கடன் தரும் வங்கிகள், விவசாயத்திற்கு அவசியமான ட்ராக்டர் வாங்க மட்டும் 14 % வட்டி வசூலிக்கிறார்கள்......

#450 பில்லியன் டாலர்கள் வரக்கூடிய அளவிற்கு 1986 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நரேந்திர மோடி கையெழுத்திட்டார். ஐம்பத்தி நான்கு லட்சம் வேலைகள் உருவாகும் என்றும் சொன்னார்கள். ஆனால் அவையெல்லாம் வெறும் காகித ஒப்பந்தங்களே தவிர நிஜத்தில் எதுவும் நடக்கவில்லை என்பது உண்மை.........

#படேலின் சிலைக்கு இரும்பு சேகரிப்பவரை தேச பக்தர் என்று பாராட்டுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் போராட்டத்திற்கு நிதி திரட்டுபவர்களை கம்யூனிஸ்டுகள் என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களின் கண்ணோட்டத்தின்படி தேச பக்தராக இருப்பதை விட கம்யூனிஸ்டாக இருப்பதே பெருமைக்குரியது......
#நிதி அடிப்படைவாதிகளுக்கு மூலதனம்தான் மதம்.
மத அடிப்படைவாதிகளுக்கு மதம்தான் மூலதனம்.
இந்த இருவருமே இப்போது கைகோர்த்துக் கொண்டுள்ளார்கள்.
இராக்கின் சதாம் ஹூசேனை வில்லனாக சித்தரித்த ஊடகங்கள், நரேந்திர மோடியை அவ்வாறு சித்தரிப்பதில்லை. ஏனென்றால் ஊடகங்களின் சந்தைக்கு  அவர் தேவைப்படுகிறார்......
 
#முதலாளித்துவம்தான் சிக்கலின் அடிப்படை. முதலாளித்துவத்தை அகற்றும் போது மக்களும் தங்களின் பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்........

#ஊதிய உயர்வு, பென்ஷன், எல்.ஐ.சி தனியார்மயம், புதிய நியமனம் என எல்லாமே அடிப்படை கொள்கைப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள், தேர்தலோடும் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் கொள்கைகளோடு இணைந்த பிரச்சினைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ், பாஜக விற்கு மாற்றாக இடதுசாரிகள் மட்டுமே இருக்க முடியும் என்பதை இன்சூரன்ஸ் ஊழியர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வலிமை அதிகரிப்பதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்......
#குத்துச்சண்டை போலவோ, மல்யுத்தம் போலவோ விளையாட்டு அரங்கில் இருவர் மோதிக் கொண்டு முடிவு செய்வதல்ல பிரதமர் பதவி......
 
 
#செக்காஸ்லோவாகியா நாட்டின் புரட்சியாளர் தோழர் ஜூலியஸ் ஃபூசிக், சிறைச்சாலைக்குள் இருந்தபடி தனது “தூக்கு மேடைக் குறிப்புகளை” எழுதத் தொடங்கிய போது “ நான் இதனை எழுதி முடிப்பதற்குள் தூக்குக் கயிறு என் கழுத்தை இறுக்கினாலும் இதன் மகிழ்ச்சியான நிறைவுப் பகுதியை எழுத லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற அவரது நம்பிக்கையை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது. இந்திய உழைப்பாளி மக்களின் ஒரு பகுதியாக உள்ள நாமும் அதே நம்பிக்கையோடு நம் கனவுகளை செயலாக்க முன்னேறுவோம்.....
 
 
#பள்ளிப் படிப்பை தொடராத பெண் குழந்தைகளின் தேசிய சராசரி 47 % என்றால் குஜராத்தில் மட்டும் 55 %. ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்பது தேசிய சராசரி என்றால் குஜராத்தில் 886 பெண்கள்தான். இந்த அவலமான நிலையைத்தான் மோடியின் அதிசயம் என்று பாராட்டுகிறார்கள்....
 
 
#சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகிகள் இருப்பதாலா இந்தியா அழகாக இருக்கிறது? மலைகளும் நதிகளும் கடல் அலைகளுமா இந்தியாவை அழகாகக் காண்பிக்கிறது? இயற்கைக் காட்சிகளும் எழில் மிகுந்த கட்டிடங்களுமா இந்தியாவின் அழகிற்குக் காரணம்?
கங்கையும் காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கும் வாரணாசியை விட்டு நான் வேறு எங்கும் வர மாட்டேன் என்று புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பிஸ்மில்லாகான் எப்போதும் கூறுவார்.
பர்வீன் சுல்தானா பாடும் மீரா பஜனைக்  கண்ணீர் மல்கக் கேட்காதவர்கள் யாராவது உண்டா?
கே.ஜே.யேசுதாஸின் குருவாயூரப்பன், ஐயப்பன் பாடல்களைக் கேட்டு உருகாதவரும் உண்டோ?
பல்வேறு இனம், மொழி, மதம் என்று இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று என்ற  இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரமே இந்தியாவை மிகவும் அழகாக காண்பிக்கிறது.
தாய்நாடு சொர்க்கத்தை விடவும் முக்கியமானது, புனிதமானது......
 
நன்றி : ராமன்
 
 
 

No comments:

Post a Comment