வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை!
ஆமாம், 2008-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், 2009-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தேசிய குற்றப் பிரிவு வழக்குப் பதிவேட்டின்படி தற்கொலைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரம் இது. 2009-ம் ஆண்டு, பல்வேறு காரணங்களுக்காக 17,368 பண்ணை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 1172 சாவுகள் அதிகம். வேளாண் விளைபொருள்களின் விலை சந்தையில் குறையவில்லை. ஆனால் தற்கொலையும் குறையாது என்றால் எங்கே குறை? இதற்கு யார்தான் காரணம்?
இந்தியா வளரும் நாடாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இங்குள்ள மிகப்பெரும் நுகர்வுச் சந்தைக்காக அமெரிக்க அதிபர் வந்து உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். சீன அதிபர் வருகிறார். ரஷிய அதிபர் வருகிறார். எல்லோரும் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், வங்கிக் கடனுக்குக் கையெழுத்திட்ட விவசாயி மட்டும், இந்த நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறான். என்ன வேதனையான வேடிக்கை!
இந்தத் தற்கொலைப் பட்டியலில் 5 மாநிலங்கள் "பெருமை' சேர்த்துக் கொண்டுள்ளன. அவை: மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள். இங்கே முந்தைய ஆண்டைக்காட்டிலும் சராசரியாக 1000 தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்த மாநிலங்களை விட்டுத் தள்ளுவோம். தமிழ்நாட்டின் நிலைமை என்ன? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் தற்கொலை அதிகம் இல்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் வருத்தம் தரும் புள்ளிவிவரம் என்னவெனில், இந்தத் தற்கொலைகள் இப்போது இரட்டிப்பாகியுள்ளன. 2008-ம் ஆண்டில் 512 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009-ம் ஆண்டில் 1060 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயத் தற்கொலைகள் குறைவு என்று தமிழக அரசு வேண்டுமானால் பெருமை பேசலாம். ஆனால், நிலைமை நன்றாக இல்லை என்பதைத்தான் இப்போதைய இரட்டிப்புச் சாவு எண்ணிக்கை வெளிப்படையாகச் சொல்கிறது.
விவசாயிகள் எண்ணிக்கை கிராமங்களில் குறைந்து வருகிறது. நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இந்நிலையில், இருக்கும் விவசாயிகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால் தமிழகத்தில் யார்தான் விவசாயத்தில் ஈடுபடப்போகிறார்கள்?
கரும்பு விளைவித்தால் விவசாயிக்கு லாபமில்லை. ஆனால் சர்க்கரை ஆலைகள் கோடிகோடியாய் லாபம் அடைகின்றன.
நெல் மூட்டைக்கு கூடுதல் விலை இல்லை. ஆனால் அரிசி மண்டிகள் இப்போதே ஜனவரி மாதத்தில் அரிசிக்கு என்ன விலை என்பதைத் தீர்மானித்து விட்டன. பொன்னி அரிசி தற்போதுரூ.800-க்கு (25 கிலோ) விற்கப்படுவது பொங்கலுக்குப் பிறகுரூ. 1000 என்று தீர்மானித்து, வாடிக்கையாளர்களிடம் இப்போதே வாங்கிக் கொண்டால் பிழைத்தீர்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் விவசாயி, மத்தியக் குழுவின் வருகைக்காகவும், அரசின் அறிக்கைக்காகவும் காத்திருக்கிறான். அரசு இழப்பீடு வழங்கினாலும், லஞ்சம் போக அவன் கைக்குக் கிடைப்பது சொற்பமாகத்தான் இருக்கும்.
சிறுஉற்பத்தியான காய்கறிகளில்கூட விவசாயி லாபம் காண முடிவதில்லை. விலையை அவனால் நிர்ணயிக்கவே முடியாது. யாரோ விலையைத் தீர்மானிக்கிறார்கள். வெங்காயம் விலை உயர்ந்தால், கொத்தமல்லி, கறிவேப்பிலைகூட விலை கூடுகிறது. இந்த விலைஉயர்வில் 10 விழுக்காடுகூட விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. இப்படித்தான் வேளாண் விளைபொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இன்றைய தமிழகத்தின் மிகப்பெரும் சவால் பாசன வசதியுடன்கூடிய விளைநிலங்களை அரசியல் பினாமிகள் வாங்கிப் போட்டு விவசாயம் செய்யாமல் தரிசாக வைத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை. ஜெனரேட்டர் வைத்து நீர்இறைக்கும் சக்தி அனைவருக்கும் கிடையாது. பிறகு எப்படி விவசாயம் நடக்கும்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், விஜயகுமார் என்கிற விவசாயி, தனக்குத் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச டி.வி.யை அமைச்சரிடமே மேடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு, "விவசாயிக்கு டி.வி. வேண்டாம், குறைந்தது ஒரு மாவட்டத்துக்காவது மின்தடையில்லாமல் செய்யுங்கள்'' என்று கூறியிருக்கிறார். குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச டி.வி. வழங்குவதைக் காட்டிலும் முக்கியத்துவம் தரவேண்டிய பிரச்னைகள், குறிப்பாக விவசாயப் பிரச்னைகள் இருப்பதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம். அரசு இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மற்றொரு மிகப்பெரும் தவறைத் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. தற்போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 75 விழுக்காடு பயனாளிகள் கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள்தான். இத்திட்டத்துக்கு இரும்புக் கம்பி, சிமென்டை வழங்கிவிட்டு, அதற்கான தொகை போக மீதித் தொகையை வீடுகட்டியவருக்கும் தருகிறார்கள். ஆனால் இந்தத் தொகையில் வீடு கட்டவே முடியாது என்பதுதான் எதார்த்த நிலைமை.
அரசு குறிப்பிட்டிருக்கும் அளவின்படியே வீடு கட்டினாலும், குறைந்ததுரூ. 1.25 லட்சம் செலவாகிறது. அரசு தரும்ரூ. 75,000க்கு ஆசைப்பட்டு, மீதித்தொகையை கிராமப்புறங்களில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இது சக்திக்கு மீறிய செலவு. அடுத்த இரு ஆண்டுகளில் இந்த வீட்டுக் கடன், வட்டியோடு பூதாகரமாக நிற்கப்போகிறது.
ஏற்கெனவே நஷ்டத்தில் சிக்கியிருக்கும் ஏழை விவசாயிக்கு இந்த வீட்டுக்கடன் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்போது, இவர்களைக் காப்பாற்றப் போவது யார்?
"இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு' என்று காகிதத்தில் எழுதிப்பிடித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏட்டுச் சுரைக்காய்...!
நன்றி : தினமணி