Tuesday, January 4, 2011

பெட்ரோல் பற்றாக்குறை ஆபத்து!



ளைகுடா நாடுகளில் சவூதி அரேபியாவிடமிருந்தும் ஈரானிடமிருந்தும் மிக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அரேபியாவுக்கு அடுத்து, இந்தியத் தேவையில் 12 சதவீதத்திற்கும் அதிகமாக ஈரானிலிருந்தே கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலிய வர்த்தகம் தொடர்பான பண பரிவர்த்தனைகளை ஈரான் தலைநகர் டெஹ்ரானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆசியன் கிளியரிங் யூனிட் (ஏசியூ) எனப்படும் நிதி பரிவர்த்தனை மையத்தின் மூலமாகவே இத்தனை ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்டு வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வங்க தேசம், பூடான், நேபாளம், பாகிஸ் தான், மாலத்தீவுகள், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடனான எண்ணெய் வர்த்தகம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் மேற்கண்ட மையத்தின் மூலமாகவே ஈரான் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 23ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி திடீரென பிறப்பித்த ஒரு உத்தரவின் மூலம், இந்தியா-ஈரான் இடையிலான எண்ணெய் வர்த்தகம் தொடர்பான பணப்பரிவர்த்தனைகளை மேற்கண்ட மையத்தின் மூலமாக நடத்துவதை ரத்து செய்தது. இது இருநாட்டு எண்ணெய் கம் பெனிகளிடையே பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்குலைக்கும் விதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி திடீரென இத்தகைய உத்தரவை ஏன் பிறப்பித்தது என்ற கேள்வி பெட்ரோலிய துறையினரிடம் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் நோக்கர்களிடையேயும் எழுந்தது.

இதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்காவுடனான இந்திய அரசின் உறவே ஆகும். 2008ம் ஆண்டு வரை, டெஹ்ரானில் உள்ள ஆசியன் கிளியரிங் யூனிட் எனும் நிதி பரிவர்த்தனை மையத்தில் அனைத்து பரிமாற்றங்களும் அமெரிக்கப் பணமான டாலரிலேயே நடைபெற்று வந்தது. ஆனால் அதற்குப் பின்னர் ஈரான் மீது அணுசக்தி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்தது. இதைத்தொடர்ந்து வேறு வழியின்றி ஆசியன் கிளியரிங் யூனிட், ஐரோப்பிய பொது நாணயமான யூரோ டாலரை தனது பரிவர்த்தனை பணமாக மாற்றிக் கொண்டது. அதற்குப்பின்னரும் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா, ஈரானுடன் யூரோ டாலரிலேயே வர்த்தகத்தை நடத்தி வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் தடை உத்தரவு அமலில் இருக்கும் பட்டியலில் உள்ள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை யூரோ டாலரில் பரிவர்த்தனை செய்வது தொடர்பாக சான்று அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை சமீபத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி கேட்டுக் கொண்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, ஆசியன் கிளியரிங் யூனிட்டோடு நிதிப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்தது. இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்பட அனைத்து பெரும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில் ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட இருநாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை தில்லியில் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கான பணப்பட்டுவாடாவை எந்த வடிவத்தில் அளிப்பது என்று சுயேச்சையாக முடிவெடுக்காமல் அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு பணிந்திருப்பதால், ஈரான் மத்திய வங்கி அதிகாரிகள் குழுவுடனான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் தொடர்ந்து பேசுவோம் என்று பெட்ரோலியத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய நிதித்துறை அதிகாரிகளும் இந்தப் பேச்சுவார்த்தையை தொடரப்போவதாகவும், இந்தியாவிடமிருந்து பணப்பரிவர்த்தனை நடைபெற வேண்டுமானால் இந்திய ரிசர்வ் வங்கியில் ஈரான் மத்திய வங்கி தனியாக ஒரு கணக்கை துவக்கி, அதன் மூலம் நடத்திக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் இந்த ஆலோசனையை ஈரான் மத்திய வங்கி நிராகரித்துவிட்டது.

இந்த சிக்கல் நீடிக்குமானால் அடுத்த மாதத்திலிருந்து ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வந்து சேராது என்ற நிலை எழுந்துள்ளது. 2009-10ம் ஆண்டில் ஈரானிலிருந்து 21.3 மில்லியன் டன் அளவிற்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. இந்த ஆண்டு 18 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட் டது. இந்த கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வருமா இல்லையா என்பது, மன்மோகன் அரசின் கையில் இருக்கிறது.

ஆசியன் கிளியரிங் யூனியன் (ஏசியு)அமைப்பின் மூலமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்திருப்பது ஈரானுடனான இந்தியாவின் வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் முடிவாகும். குறிப்பாக நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 16 முதல் 17 சதவீதம் வரை கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்ற நிலையில் அந்த இறக்குமதியையும், இயற்கை எரிவாயு இறக்குமதியையும் கடுமையாக பாதிக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையும் ஈரானுக்கு எதிராக தடைகளை விதித்துள்ள போதிலும், எரிசக்தித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் நடைபெறும் இறக்குமதிக்கு அது விலக்கு அளித்துள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உறுப்பினர் என்ற முறையில் அந்த விதிகளை மீறி இந்தியா மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவை அறிவித்தவுடன், அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர், இது இந்தியாவின் மிக முக்கிய மான நடவடிக்கை என்று பாராட்டு தெரிவித்திருப்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.

இந்த விஷயங்களைச் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேச நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப்பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment