Sunday, March 6, 2011

உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி!



துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது.  தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள்.  வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால் காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. 

மகத்தான அந்த தருணங்களில்,  ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது ஆன்மாவின் சுருதியை  மீட்டியிருக்கிறது.  ஏகபோகங்களையும், அதிகார பீடங்களையும்  வீழ்த்தி, பறவைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது.

அவள் பெயர் அமல் மத்லூதி!  தானே எழுதி, தானே ராகம் கொடுத்து, தானே பாடுகிறார். தேச எல்லைகளையெல்லாம் ஒரு பறவையின் சிறகசைப்பாய் அவள் குரலும், வார்த்தைகளும் கடந்து செல்வதைக் கவனியுங்கள். 

சுதந்திரமாயும், அச்சமற்றும் இருப்போரின் உருவம் நான் 
இறவா ரகசியங்களின் உருவம் நான்
இறுதிவரை போராடுபவர்களின் குரல் நான்
கூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்


அந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள் 
எம்மக்களின் அன்றாட  உணவைப் பறித்தார்கள்
கருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள்
ஒடுக்கப்பட்ட அந்த  மக்களின் உரிமைதான் நான்


நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
நான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே
ஒரு வாய்  உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள்
நம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள்
நாம் உதவி உதவி என்று கதறிய போது
துரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்


அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
வருஷங்கள் காதலித்த  வண்ணம்
நதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம்
தீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும்
சுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும்
அந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே
இருளில்  ஒளிரும் தாரகையும்  நானே
கொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே
அக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே
மறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே
என்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே  நானே

நாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்
அதிலிருந்து எழுப்புவோம்
பறவைகளையும், வீட்டையும், தேசத்தையும்
காற்றையும் மழையையும்   
உருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும் 
  
                                                                                    
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து  மனிதர்களின் ஒற்றை உருவம் நான்
துப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்
 

நன்றி : மாதவராஜ் 

No comments:

Post a Comment