Wednesday, March 16, 2011

கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்


சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சிந்தனைகளைப் பெற்று, ஒட்டு மொத்த மானுட விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்களை இப்படிப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக அல்லும் பகலுமாய் இயக்கங்கள் நடத்தி, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பும் ஒரு மகத்தான இயக்கத்திற்கு நேரும் கதி சகிக்க முடியாததாய் இருக்கிறது.  தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும்  எளிமையும், நேர்மையும் கொண்டவர்களுக்கு எப்பேர்ப்பட்ட சோதனை இது. வரலாற்றின் நெடிய பக்கங்களில் முக்கியமான பாத்திரம் வகிப்பவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற அவலக் காட்சி இது.

மற்ற கட்சிகளைப் போல,  ‘ஐந்து வருடங்களுக்கான மக்களின்  இறுதித் தீர்ப்பாக’ கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தேர்தலை பார்ப்பதில்லை. இந்த அமைப்பின் அவலட்சணங்களையும்,, அரசின் அநியாயங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு மேடையாகவே  தேர்தலை பார்க்கிறார்கள். அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எதிராகத் திரள்பவர்களோடு கைகோர்த்து, பிரச்சாரம் செய்து  தங்கள் கருத்துக்களுக்கு பௌதீக சக்தி சேர்க்க  முயல்கிறார்கள். மக்களின் எதிர்ப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த பயன்படுத்துகிறார்கள். தேர்தல் கூட்டணி என்பதன் பொருளை இப்படித்தான்  புரிந்தும், செயல்படுத்தியும் வருகின்றனர் கம்யூனிஸ்டுகள். 

இப்படித்  தேர்தலில் நின்று கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்களும், எம்பிக்களும் மற்ற கட்சியினரைபோல்  நாலு காசு பார்க்கப் போவதில்லை. எந்தக் கோட்டையையும் கட்டப் போவதில்லை (அப்படி கட்டுகிறவர்களுக்கு இயக்கத்தில் இடமிருப்பதில்லை). பஸ்ஸிலும், மொபெட்டிலுமே  வாழ்நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருப்பார்கள். தெருவோரக் கடைகளில் டீயும் பன்னையும் சாப்பிட்டுவிட்டு. “தோழர்” என  உற்சாகமாய்ச் சிரிப்பார்கள். அவ்வளவுதான். இப்படித் தேர்தலில் நிற்பதன் மூலம்  முடிந்த வரையில்,  சட்டசபைகளிலும், பாராளுமன்றங்களிலும் தங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, மக்களின் குரலை கூடுதல் சக்தியோடு பிரதிபலிக்கிறார்கள். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துகிறார்கள்.  சாத்தியமானவைகளில், தலையீடு செய்து தடுத்து நிறுத்தவும் செய்கிறார்கள். ஆனால் அதுமட்டுமே  தங்கள் முக்கியமான நடவடிக்கையாகக்  கருதுவதில்லை.

எல்லாவற்றையும், மக்களிடம்  கொண்டு செல்ல வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். போராடுகிறார்கள். ஒரு ஊரின் தெருவில் சாக்கடையை சுத்தம் செய்வதிலிருந்து,  ஒரு தேசத்தின் மிகப்பெரும் பிரச்சினையான ஸ்பெக்ட்ரம்  ஊழல் வரை அவர்கள் இயக்கங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  சாலைகளில்,  தெருவோரங்களில் பத்துப்பதினைந்து பேர் சிவப்புக் கொடிகளோடு  மறியலும், ஆர்ப்பாட்டமும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.    அவ்வழியே போகும்  மக்கள் இன்று அவர்களைக் கவனிக்காமல் இருக்கலாம். ஒருநாள் அவர்கள் திரும்பிப் பார்ப்பார்கள், ஒருநாள் அவர்கள் அணி திரள்வார்கள், ஒருநாள் தங்கள் துயரங்களுக்கான விடியலைக் கொண்டு வருவார்கள் என்னும் மகத்தான கனவோடு கம்யூனிஸ்டுகள் முஷ்டி உயர்த்தி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  மக்கள் மேல் இருக்கிற நம்பிக்கை இது.

இதுதான் கம்யூனிஸ்டுகளின்  பாதையும் பயணமும் . இதன் போக்கில் கம்யூனிஸ்டுகள் அடையும்  துன்ப துயரங்களில் ஒன்றுதான், ஜெயலலிதா   போன்றவர்கள் தேர்தலில்  ஒதுக்கும் சீட்டுகளுக்காக  பேச்சுவார்த்தை நடத்துவது.  கருணாநிதி, ஜெயலலிதாக்களின் பின்னால் மக்கள் அணி திரண்டு நிற்பதால், இந்த அவமானங்களை கம்யூனிஸ்டுகள் பொறுத்தாக வேண்டி இருக்கிறது. அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் நடைமுறை தந்திரமாக, இந்த அழுத்தங்களை சுமக்க வேண்டி இருக்கிறது.

இந்த இடத்தில்தான் கம்யூனிஸ்டுகள் கேலிக்குரியவர்களாகவும், தரமிறங்கி நிற்பவர்களாகவும், பத்தோடு பதினொன்றாகவும்  சித்தரிக்கப்படுகிறார்கள், கிண்டலடித்திருக்கிறார்கள்.  அந்த நண்பர்களுக்கெல்லாம் என் கேள்வியும், என் பதிலும் மிக எளியது, நேரிடையானது. “கம்யூனிஸ்டுகள் யாருக்காக, எதற்காக இப்படிஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்?”  இதில் தனிப்பட்ட சுயநல அரசியல் ஏதும் இருக்கிறதா, இல்லை பொதுநலம் சார்ந்த பொறுப்பு இருக்கிறதா?

No comments:

Post a Comment