Thursday, December 16, 2010

அலைக்கற்றை ஊழலும், அப்பாவி மக்களும்


தற்போது இந்தியத் துணைக் கண்டத்தையே உலுக்கி எடுத்த ஒரு நிகழ்வு எதுவென்றால் தொலைத் தொடர்புத் துறையில் 2 ஆம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற மாபெரும் ஊழல்தான். ஒன்றல்ல, இரண்டல்ல 1,70,000 கோடி.
இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு ஆண்டுக்கான நடுவண் அரசின் வருவாயில் மூன்றில் ஒரு பங்காகக் கருதப்படும் 1,76,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற் றுள்ளதை உணர்ந்த எவரும் மிரளாமல் இல்லை.
ஆனால் எவ்வித குற்ற உணர்வும் இன்றி, வெட்கம், மானமின்றி மக்களைப் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி கொள்ளையடிக்கும் கூட்டம் பெருகிக் கொண்டுதானிருக்கிறது.
விஞ்ஞான அடிப்படையிலும், சட்டப்படியும் ஊழல் செய்வதில் கைதேர்ந்து விட்ட அரசியல் வாதிகள் உலவும் மண்ணில், அத்தகைய ஊழலைப் பற்றியும், அயோக்கிய அரசியல்வாதிகள் பற்றியும் எவ்விதக் கவலையும் இல்லாமல் அந்த வேளை கஞ்சிக்கு மாடாய் உழைக்கும் சராசரி மனிதரின் நிலை வருத்தத்திற்குரியதுதான்.
அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) என்றால் என்ன?
1990க்குமுன்பு வரை தொலைபேசிகள் அனைத்தும் கம்பி வழியில் செயல்பட்டன. தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக கைபேசி வந்ததும் மின்காந்த அலைகள் ஒரு அலைக்கற்றை வரிசையில் அனுப்பப்பட்டு கைபேசியில் இருக்கும் குறியீட்டு வாங்கியினால் (Receiver) பெறப்பட்டுத் திரும்ப அனுப்பப்படுகிறது. ஏறக்குறைய ஒரு வானொலி செயல்படும் முறையை ஒத்த வழிமுறை.
செயற்கைக் கோள் உதவியுடன் தகவல் தொடர்புக்குப் பயன்படும் இந்த அலைக் கற்றைகள் (ஸ்பெக்டரம்) இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சகம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இத்துறையின் மூலம் கைபேசி சேவைக்கான இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு வருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டையத் தொழில் நுட்பத்தின் படி முதல் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
கைபேசி சேவைக்கான உரிமம் பெற்ற பல நிறுவனங்கள்அப்போதே அடிமாட்டு விலைக்கு ஒதுக்கீட்டைப் பெற்று வணிக ரீதியில் பல்லாயிரம் கோடிக்கு விற்று சம்பாதித்தது மட்டுமல்ல, பிந்தைய ஆண்டுகளில் நடுவண் அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகையைக் கூடச் செலுத்தாமல் ஏமாற்றி விட்டன.
இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு 2 ஆம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றது. இந்த ஒதுக்கீடு நடைபெற்றபோது மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் முன்னணித் தளபதியும் "கருணா'வின் வலது கரமுமான ஆ.ராசா.
இம்முறை ஒதுக்கீடு நடைபெற்ற போது, பொதுவான முறையில் ஏலம் விடப்படாமல் முதலில் வந்தவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்கிற அடிப்படை யில் அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக ஸ்வான், யுனிடெக் என்ற இரு நிறுவனங்கள் ஊழல் பெருச்சாளிகளின் உதவியுடன் 2001 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிமாட்டு விலைக்கே அலைக்கற்றை ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொண்டன.
ஸ்வான் என்ற ஒரு நிறுவனம் ரூ.1537 கோடிக்கும், யுனிடெக் நிறுவனம் ரூ.1651 கோடிக்கும் அலைக் கற்றைகளை வாங்கியுள்ளன. ஸ்வான் நிறுவனம் நாடெங்கும் 13 பகுதிகளிலும் யுனிடெக் 23 பகுதிகளி லும் கைபேசி சேவையை வழங்க உரிமம் பெற்றன.
இதிலே வேடிக்கை என்னவென்றால் இந்த இரு நிறுவனங்களுக்கும் இன்னும் உரிமம் பெற்ற (சிறிய அளவில்) பல்வேறு நிறுவனங்களுக்கும் துரும்புக்குக் கூட தகவல் சேவை பற்றித் தெரியாது. இவை யனைத்தும் நில வணிகம் செய்து வந்த நில விற்பனை நிறுவனங்களே. இதில் ஸ்வான், யுனிடெக் நிறுவனங்களில் பினாமி பெயரில் கருணாநிதியின் குடும்பம் பங்குதாரராக உள்ளதாக தகவல் உள்ளது.
இந்நிலையில் உரிமம் பெற்ற சில நாட்களில் ஸ்வான் நிறுவனம் 45% பங்குகளை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எடிகலாம் நிறுவனத்திற்கு ரூ.4500 கோடிக்கு விற்று விட்டது. அது போக யுனிடெக் நிறுவனம் நார்வேயைச் சேர்ந்த "டெரிநார்' நிறுவனத்திற்கு ரூ.6120 கோடிக்கு விற்று விட்டது.
இவைப் போல பல்வேறு நிறுவனங்கள் செய்த ஊழலின் காரணமாக அரசுக்கு ரூ.1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தொகை ஆரம்பத்தில் 60,000 கோடியாக மதிப்பிடப்பட்டது. அப்போதே எதிர்க்கட்சிகள் இதைப் பற்றிக் கேள்வியெழுப்பின. ஆனால் அமைச்சர் ராசாவோ சட்டப்படித்தான் ஒதுக்கீடு நடைபெற்றதாக வாதம் புரிந்தார்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியோ ராசாவை மடியிலிருந்து கீழே இறக்காமல் தலித் என்பதனால் தாக்குதலுக்குள்ளாகிறார் என்று பல்லவி பாடினார்.
ஆனால் தொடர்ச்சியாக நெருக்கடி முற்றி வர அமைச்சர் ராசாவோ, முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையின் பேரில்தான் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதாக பச்சைப் பொய்யை அவிழ்த்து விட்டார்.
ஆனால் டிராய் தலைவர் என். மிஸ்ராவோ இதை மறுத்து ராசாவுக்கு எதிராக அறிக்கை விட்டார். இதனால் கொதித்துப் போன எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தொடங்கிய நாள் முதல் கொண்டே இப்பிரச்சினையை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கி விட்டன.
இதனிடையில் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் டி.எஸ். மாத்தூர் என்பவரும் அமைச்சர் ராசா அலைக் கற்றை ஒதுக்கீட்டில் ஏலம் விடலாம் என்ற தம்முடைய ஆலோசனையை ஏற்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் புகார் கூறிவிட்டார்.
எனினும் தமிழக முதல்வர் கருணாநிதியோ ராசா குற்றமற்றவர் என்று கதை விட்டுக் கொண்டிருந்தார். ஏனென்றால் இந்தப் பணம்தான் திருமங்கலம் தொடங்கி அகில இந்தியா வரை ஓட்டு வாங்க தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் கையாண்ட பணம். அதுமட்டுமல்ல, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இந்திய அரசால் கொல்லப்படுவதை தி.மு.க. கண்டு கொள்ளாமலிருக்க தி.மு.க. குடும்பத்தின் இத்தகைய ஊழலை காங்கிரசு கண்டு கொள்ளாது என்ற எழுதப்படாத ஒப்பந்தமும் கூட கருணாநிதியை இப்படி பேச வைக்கிறது.
எனினும் தற்போது இதனால் காங்கிரசுடனான கூட்டணி பாதிக்கும் என்பதனாலும் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் சிக்கல் என்றால் ஜெயலலிதா காங்கிரசுடன் கை கோர்க்கத் தயாராக இருப்பதையும் உணர்ந்து அமைச்சர் ராசாவை பதவி விலகச் சொன்னார் கருணாநிதி!
இதனால் வேறு வழியின்றி நவம்பர் 14 அன்று பதவி விலகல் மடலை அனுப்பினார் ராசா.
அத்தோடு நில்லாமல் தான் குற்றமற்றவர் என்றும் தாம் அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அத்துணைத் தகவல்களும் பிரதமருக்குத் தெரியும் என்று கூறி மன்மோகனின் மண்டையை உருட்டி விட்டார்.
இதனால் துள்ளிக் குதித்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தன.
உச்சநீதிமன்றமும் பிரதமருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ யோ இது தொடர்பாக 3 மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்துள்ளது.
1986ல் போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் 69 கோடி ஊழல் செய்த இராஜீவ் காந்தி, 1989ல் பிரதமராக முடியவில்லை. ஆனால் 1,76,000ம் கோடி ஊழல் நடந்ததைத் தெரிந்து கொண்ட மன்மோகன் எப்படி இவ்வளவு நாள் பிரதமராக இருக்கிறார்.
இந்தப் போலி சனநாயக மோதல் மக்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமைதயத் தான் தந்திருக்கிறது. மாறாக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பதவியிறக்கம் செய்யும் அதிகாரத்தைத் தரவில்லை. அத்தகைய அதிகாரத்தை பெற மக்கள் முயலாவிடில் மக்கள் அடிமைகளாக சாவதை யாராலும் தடுக்க முடியாது. அதைவிட நேர்மையான அரசியலை நோக்கி மக்கள் அணிதிரண்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே மிகச் சிறந்த வழி. அதுவொன்றே மக்கள் எதிரிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும் மக்கள் தரும் சரியான படிப்பினை.

நன்றி : உழைக்கும் வர்க்கம்

No comments:

Post a Comment