Sunday, December 12, 2010

தலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறியர்!

தலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறியர்!

விசாரணையில் பிரியங்கா, அருகில் அழும் தந்தை


ள்ளிக்குச் சென்ற குழந்தையை ஒரு ஆசிரியர், வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொன்னார். அதை மறுத்த அக்குழந்தையை வகுப்பறையை சுத்தம் செய்யச்சொல்லி அக்குப்பைகளை தின்னச்சொன்ன கொடூரம் நிகழ்ந்து ஒரு ஆண்டாகியும் சம்பந்தப்பட்டவர் மீது பள்ளியோ, காவல்துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னையில் தேசிய குழந்தைகள் நலன் குறித்த நீதிவிசாரணை நடைபெற்றது. இவ்விசாரணையில் 337 வழக்குகள் தில்லிக்கு அனுப்பப்பட்டன. இதில் 57 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை சென்னையில் விசாரிக்கப்பட்டன.  தலித் மாணவர்களை பள்ளி விடுதி கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தியது,  5 வயது மாணவியை 2 ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதால், மாணவி இறந்தது, மாணவன் கல்வி கட்டணம் கட்டாததற்காக பள்ளியில் இருட்டறையில் அடைத்தது என கொடூரமான பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இவ்விசாரணையில்  தேசிய குழந்தைகள் நல ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, நீதிபதி ராமமூர்த்தி, பிலால் இசாகி, லோ வர்மா, கிரண்பேடி, நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அங்கு விசாரணைக்கு வந்த ஒரு பெற்றோர், “தங்கள் குழந்தையை ஆசிரியர் ஒருவர் வகுப்பைச் சுத்தம் செய்யச்சொல்லி, அந்தக்குப்பையைத் தின்ன வைத்தார்“ என்று அவர்கள் கண்ணீர் மல்கச் சொன்னது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை வைத்தியநாதபுரம் கங்காணி லைனைச் சேர்ந்தவர் தனபால் (40). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு பிரியங்கா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். தனபால் குறவர் இனத்தைச் சேர்ந்தவர். செப்டிக் டாங்க் அடைப்பை எடுப்பது, ஆட்டோ ஓட்டுவது எனத் தொழில் செய்து தனது குடும்பத்தை பாது காத்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து அவர் கூறியவை யாருக்கும் நிகழக்கூடாதவை.

நான் ஏழாம் வகுப்பு ஏ பிரிவில் படித்து வந்தேன். கடந்த 19.3.2010 அன்று மாலை 3.30 மணியளவில் எங்கள் பக்கத்து வகுப்பு ஆசிரியர் லதா என்பவர், மாணவிகள் பிரிஜிதா, பாண்டி பிரியா, மற்றும் என்னை அழைத்து,“ ஏன் கடந்த 2 நாட்களாக வகுப்பறையை சுத்தம் செய்யவில்லை” என்று அதட்டினார். உங்கள் வகுப்பு ஆசிரியர் சொன்னால் தான் கேட்பீர்களா? நான் பக்கத்து வகுப்பு ஆசிரியர் என்பதால் என் பேச்சைக் கேட்க மாட்டோம் என்ற திமிரில் இருக்கிறாயா என மிரட்டினார். நீங்கள் அனைவரும் வகுப்பறையை சுத்தம் செய்யாத காரணத்தால் நீங்கள் இப்போ வகுப்பறையை கூட்டி என் கண்முன்னால் அள்ளிச் சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டார். நாங்கள் எல்லோரும் எப்படி மிஸ் சாப்பிட முடியும் என்றும் வகுப்பறையை சுத்தம் செய்யாதது தப்புதான் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டோம். அப்படி இருந்தும் லதா மிஸ், கொஞ்சம் கூட இரக்கப்படவில்லை, நீங்க இந்த வகுப்பறையை சுத்தம் செய்து அதை தின்ன வேண்டும் என்றும் மீண்டும் கூறினார். எங்க வகுப்பில் உள்ள லீடரை அழைத்து, இவர்கள் கூட்டின குப்பைய ஆளுக்கொரு கை அளவு கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இல்லையென்றால் அதை நீ தான் சாப்பிட வேண்டும் என்றும் லீடரையும் மிரட்டினார்.
அதன் பிறகு வேறு வழியில்லாமல் சுத்தம் செய்து ஆசிரியர் சொன்னபடி, லீடர் எங்கள் மூவருக்கும் ஆளுக்கொரு கை அளவு குப்பையை அள்ளிக் கொடுத்தார். அப்போது நாங்கள் அந்த குப்பையைப் பார்த்த போது அதில் பழைய வெள்ளச்சோறு, அழுக்குப் பேப்பர், மண் எல்லாம் இருந்தது.மிஸ் அதட்டியவுடன் வேறு வழியின்றி இந்த குப்பையைச் சாப்பிட்டோம்” 
என பிரியங்கா கூறினார். குப்பையைச் சாப்பிட்ட குழந்தைகள் மூவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று குழந்தைகளும் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பிரியங்காவின் தந்தை தனபால், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து 21.3.2010 அன்று மூன்று குழந்தைகளிடம் தனித்தனி வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் தேசிய குழந்தைகள் நலவிசார ணையில் அளிக்கப்பட்ட புகாராகும். பிரியங்கா தவிர மற்ற இரண்டு குழந்தைகளும் சமாதானம் ஆகி விட்டதாகக்கூறப்படுகிறது.

தனபால் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலம் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறினார்.

இதுகுறித்து பிரியங்காவின் தந்தை தனபாலிடம் பேசிய போது, எனது குழந்தையைக் குப்பையைத் தின்ன வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  வேளாங்கண்ணிக்கு குடும்பத்தோடு   சென்ற போது, திருச்சியில் பிரியங்காவிற்கு வலிப்பு வந்து விட்டது. திருச்சி மருத்துவமனையில் அனுமதித்து அவளுக்கு சிகிச்சை அளித்தோம். அதற்கு முன்பு வரை அவளுக்கு இப்படி வந்ததில்லை.

அனைத்து குழந்தைகள் மத்தியிலும் குப்பையைத் தின்ன வைத்ததால் எனது குழந்தையின் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் ரூபாய் வாங்கித் தருகிறோம், பிரச்சனையை இத்தோடு விட்டு விடுங்கள் என்று பலர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  என் குழந்தையைப் போல வேறு எந்த குழந்தைக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது. ஆகவே, சம்பந்தப் பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இதுவரை உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

தற்போது வேறு பள்ளியில் பிரியங்கா 9-வது வகுப்பு படித்து வருகிறார். அவர் முதலில் படித்த பள்ளியில் பள்ளிச்சான்றிதழ் வாங்கச் சென்ற போது தனபாலிடம், வெள்ளைப் பேப்பரில் எழுதி வாங்கியதாக் கூறப்படுகிறது. இதுநாள் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாநகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்முறைகள், பாகுபாடுகள், தாக்குதல்கள் என்பது பள்ளியில் குழந்தைகள் வரை நீடிப்பதற்கு தமிழக அரசின் செயல்பாடுகளே காரணம்.

எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை காவல்துறையில் பதிவு செய்ய  கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை கல்வித்துறை முதன்மை அலுவலர், மதுரை மகபூப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மாணவியின் படிப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படக்கூடாது எனவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

வெளியே தெரிய வருகிற இதுபோன்ற வன்கொடுமைகளுக்கான  தண்டனையும், பாதிக்கப்பட்டவ்ர்களுக்கான நீதியும் அரிதாகவே கிடைக்கின்றன. வெளியே தெரியாமல் எவ்வளவோ இந்த தேசத்தில் மௌனங்களுக்குள்ளும், பெருந்துயரங்களுக்குள்ளும் புதைந்து கிடக்கின்றன. ஜாதி வெறியும், தீண்டாமையும் சபிக்கப்பட்ட நிலமெங்கும் வரலாற்றின் கறைகளாவும், அழுகிப்போன குப்பைகளாகவும் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் யார் வாயில் திணிப்பது?
நன்றி: தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment