Saturday, December 11, 2010

ஜனநாயகத்துக்கு சவால்விடும் கட்டணமல்லா கட்டணங்கள்!



"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ் செய்துங்கக் கரிமுகத் தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா."

-கடவுள் தன் படைப்பாகிய மனிதர்களுக்கு உடலையும் உயிரையும் வாழ்க்கை வசதிகளையும் போல் மொழியறிவையும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் கதை என்னவென்றால் கடவுளை நம்புகிறவர்கள் அவரை இப்படி நான்கு சங்கதிகளைக் கலந்துகொடுத்து கவனித்துக்கொண்டால்தான், அவர்களுக்குக் கடவுள் தான் செய்ய வேண்டியதைச் செய்வாராம்!

இப்படி இறைவனுடனேயே ஊழல் பேரம் நடத்துகிற சமுதாயமாக இருப்பதால்தான் இன்று நாட்டின் சகல மட்டங்களிலும் ஊழல் ஒரு பெரும் சக்தியாக ஆக்கிரமித்திருக்கிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கதைப் புத்தகங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், மேடைப்பேச்சுகள், பயண நேரக் கலந்துரையாடல்கள், நியாய விலைக்கடைக் காத்திருப்புகள் என எங்கும் ஊழல் பற்றிய கோபதாபங்கள் வெளிப்படவே செய்கின்றன. ஆனால், நடைமுறை வாழ்க்கையில், லஞ்சம் வாங்குகிறவர்கள் எந்த உறுத்தலுமின்றி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்துத் தங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள ஆகப்பெரும்பாலோர் தயாராகவே இருக்கிறார்கள்.

மாப்பிள்ளை என்ன பண்ணுகிறார்? அரசாங்க அதிகாரியா இருக்கிறார். ஓ, அப்படின்னா வரும்படிக்குக் குறைவிருக்காது. - இப்படியாக ஊழலை வெகு இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை வலுவாக ஊன்றியிருக்கிறது. "தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காமல் விடுவானா" என்ற பழமொழி ஊழலை ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்து பரவலாக இருப்பதைக் காட்டுகிறது. முதலாளித்துவம் பெற்றெடுத்த ஒரு கிரிமினல் குழந்தைதான் ஊழல்.

பொருளாதாரத்தில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளிலும் ஊழல் இருக்கவே செய்கிறது. அந்த நாடுகளோடு ஒப்பிடுகிறவர்கள் ஒன்றைச் சொல்வார்கள். அதாவது அந்த நாடுகளில், சட்டத்துக்குப் புறம்பாக ஒரு வேலை நடந்தாக வேண்டும் என்றால் - எடுத்துக்காட்டாக மின்சாரத் திருட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமானால் - லஞ்சம் தரவேண்டியிருக்கும்; இங்கேயோ, சட்டப்படி செய்ய வேண்டியதற்கே - எடுத்துக்காட்டாக முறைப்படி மனுச் செய்து கட்டணம் செலுத்தி மின்சார இணைப்பு பெறுவதற்கே லஞ்சம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. ஒரு வீடு வாங்கி பதிவு செய்யப் போகிறவர் அனைத்து ஆவணங்களையும் நூற்றுக்கு நூறு சரியாக ஒப்படைத்தாலும், அலுவலகத் தரகரிடம் உரிய தொகையைத் தள்ளிவிடாமல் அதிகாரியின் மேசையிலிருந்து ஆவணம் நகரவே நகராது. புரட்சிகரமாக சாதிவிட்டு சாதி கலப்புத் திருமணம் செய்துகொள்ள முன்வருகிற இளம் இணைகள் கூட அதைப் பதிவு செய்துகொள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டணமல்லாக் கட்டணங்களைக் கட்டியாக வேண்டும்.

2007ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களுக்கு சட்டப்படி கிடைத்தாக வேண்டிய பல்வேறு அரசாங்க சேவைகளுக்கு (காவல்துறை உதவி முதல், பொதுவிநியோகத்திற்கான குடும்ப அட்டை பெறுவது வரையில்) லஞ்சம் கொடுத்தாக வேண்டியுள்ளது என தெரிவிக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் முதலாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இப்போது அந்த சட்டத்தின் கீழ் வேலை பெறுவதற்கு குடும்ப அட்டை இருந்தாக வேண்டும் என்பதால் கிராமப்புற ஏழை மக்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

அன்றாட வாழ்வில் இப்படி நேருக்கு நேர் எதிர்கொள்கிற சில்லறை லஞ்சக்கெடுபிடிகள்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. மக்களின் கோபத்திற்கும் இலக்காகின்றன. ஆனால், அரசாங்கத்தின் மேல்மட்டங்களில், அரசு அதிகாரத்தின் உயர் பீடங்களில் நடக்கிற ஊழல்கள்தான் இந்த கீழ்மட்ட ஊழல்களுக்குக் காரணமாக இருக்கின்றன. சிரசு சரியில்லை என்றால் தேகத்தின் மற்ற அங்கங்களும் கெட்டுப்போகும். அரசு சரியில்லை என்றால் தேசத்தின் மற்ற கட்டமைப்புகளும் கெட்டுப்போகும்.

அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான அரங்க வசதிகளை ஏற்படுத்தியதில் மிகப்பெரும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பது உலக அரங்கத்தில் தேசத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது. ஒரே ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்: விளையாட்டு வீரர்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான கருவிகள் வாங்கப்பட்டன. அவற்றில் ஒன்றாகிய ஓட்டப்பயிற்சிக்கான டிரெட்மில் எந்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ.9,75,000 கொடுத்து ஒரு லண்டன் நிறுவனத்திடமிருந்து வாடகைக்குக் கொண்டுவரப்பட்டது. அதே எந்திரத்தை விலைக்கு வாங்கியிருந்தால் சுமார் 7 லட்சம் ரூபாய்தான் ஆகியிருக்கும். இப்படியாக ஒவ்வொன்றிலும் எந்த அளவிற்கு முறைகேடுகள் நடந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
இப்போது அதுகுறித்த விசாரணைகள் தொடங்கியுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி, தில்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்டோர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி அறிக்கைச் சண்டைகள் நடத்தியது, உள்ளரங்கில் நடைபெற்ற குத்துச்சட்டைப் போட்டிகளைவிட சுவையாக இருந்தது.

இத்தனை அவலங்களையும் தாண்டி இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக தங்கள் கடமைகளை நிறைவேற்றி இரண்டாம் இடம் என்ற பெருமிதத்தை நாட்டிற்குப் பெற்றுக் கொடுத்தார்கள். ஊழலில் காணாமல் போன பணம் இந்த வீரர்களின் பயிற்சிகளுக்கும் வசதிகளுக்கும் திருப்பிவிடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பான சாதனைகளைச் செய்திருப்பார்களே!

உயர்மட்ட பேரங்கள் மக்கள் கவனத்திற்கு வருவதில்லை. ஆகவேதான் தொலைத் தொடர்புத் துறையில் நிகழ்ந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் புதிராகவே இருக்கிறது. இரண்டாம் தலைமுறை அலைவரிசைகள் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிகக் குறைவான விலைகளுக்கு ஏலம் விடப்பட்டதில் ரூ.60,000 கோடி நிதிமுறைகேடு நடந்திருக்கிறது என இடதுசாரி இயக்கங்கள்தான் மக்கள் கவனத்திற்கு கொண்டுவந்தன. தலைமைத் தணிக்கையாளரே கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விமர்சித்துள்ள போதிலும் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் உள்ள திமுக அமைச்சர் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்கவோ விசாரணைக்கு ஆணையிடவோ தயாராக இல்லை.

காங்கிரஸ் அரசின் ஊழல், நாட்டின் விடுதலைக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1937ல் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்தியது. விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெரிய கட்சி என்ற முறையில் மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, 6 மாநிலங்களில் அக்கட்சி அரசு அமைத்தது. காங்கிரஸ் அமைச்சர்களும் வட்டாரத் தலைவர்களும் ஊழல் ருசி பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதைக் கண்டு மனம் குமுறிய காந்தி, ஊழல் மலிந்துபோன கட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதைவிட காங்கிரஸ் மொத்தத்தையும் கவுரவமாகப் புதைத்து அடக்கம் செய்துவிடவும் நான் தயாராக இருக்கிறேன், என்று வேதனையோடு கூறினார்.

அரசுப்பணிகளில் நடைபெறுகிற ஊழல்கள் மட்டுமல்ல, அரசியல் பணிகளிலும் ஊழல் நாற்றக்கறை அழுத்தமாகப் படிந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களை தனது வேலிக்குள் வைத்துக்கொண்டது. கனிமச் சுரங்கங்களை எடுத்து தனி ஆட்சி போல் இயற்கைச் சமநிலைக்கு குந்தகம் செய்து கொண்டிருக்கிற ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையிலிருந்து தள்ளி வைக்கும் துணிவு எடியூரப்பா அரசுக்கு கொஞ்சமும் கிடையாது. காரணம் பணத்தின் பலம்!

இந்தியாவின் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணுமின் உடன்பாடு செய்து கொண்ட மன்மோகன் சிங் அரசுக்கு சென்ற அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டன. அதன் பின் நாடாளுமன்ற மாநிலங்களவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, கோடிக் கணக்கில் பணம் கொடுத்து ஆதரவைத் திரட்ட காங்கிரசால் செய்த முயற்சி அம்பலத்துக்கு வந்தது. அப்பழுக்கற்ற பொருளாதார மேதை என்று போற்றப்படுகிற மன்மோகன் சிங், அந்த இழிவான பேரத்தை கண்டுகொள்ளவில்லை. அவரால் எப்படி அ. ராசாக்களைக் கட்டுப்படுத்த முடியும்?

நாட்டின் பாதுகாப்புத் துறை மிகவும் பரிசுத்தமாக இயங்குகிறது என்று அப்பாவி மக்கள் கருதுகிறார்கள். கார்கில் போன்ற களங்களில் ராணுவ வீரர்களின் சேவையையும், தியாகத்தையும் செய்திகளாக அறிந்து அவர்களுக்கு சல்யூட் வைப்பதில் நம் மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், அங்கு உயிரிழந்த வீரர்களுக்கு சவப்பெட்டிகள் வாங்கியது முதல், பாதுகாப்புப் படையினருக்கான போர்வைகள், சீருடைகள் வாங்குவது வரையில் தரகர்களும், லஞ்சப் பேர்வழிகளும் புகுந்து விளையாடுகிறார்கள் என்ற தகவல் ஒரு பக்கம் மக்களின் மனங்களைக் குலுக்கியது; இன்னொரு பக்கம் தன்னை வித்தியாசமான கட்சி என்று சொல்லிக்கொண்ட பாஜக தலைமையிலான ஆட்சி ஊழல் ருசியில் எவ்வகையிலும் மாறுபட்டுவிடவில்லை என்பதும் தெரியவந்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்வதிலும் மேல்மட்ட ஊழல் உண்டு என்பதை, டெஹல்கா இணையத்தள ஏடு, தனது ஒரு புலனாய்வு இதழியல் நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இப்படிப்பட்டவர்களின் கையில் நாடு பாதுகாப்பாக இருக்குமா என்ற நியாயமான அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் தொடங்கப்பட்டாலும் அதிலே எக்கச்சக்கமான பணம் கைமாறுவது பற்றி புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இப்படி 100 கோடி, 1000 கோடி பல்லாயிரம் கோடி என்று பணம் கையாடல் செய்வது எதற்காக? ஊழல் பேர்வழிகளில் சொந்த சொத்துக் குவிப்போடு மட்டும் இது சுருங்கிவிடவில்லை. நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கே உலை வைப்பதாக ஊழல் உருக்கொள்கிறது என்பதுதான் மிகவும் கவலைக்குரியது.

அண்மையில் தமிழகத்தில் சில சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தபோது ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கொடுத்த விவகாரம் பெரிதாய்க் கிளம்பியது. அந்த அளவுக்குப் பணம் எங்கேயிருந்து வந்து கொட்டியிருக்கும்? ஊழல் கால்வாய்கள் அதற்காகத்தானே வெட்டப்படுகின்றன!

வறுமையிலும், வாழ்க்கைப் போராட்டத் தேவைகளிலும் நெறிபட்டுக்கொண்டிருக்கிற ஏழை எளிய மக்கள் தங்களை இப்படிப்பட்ட நிலைமைகளுக்குத் தள்ளிவிட்ட சமுக-அரசியல் அமைப்புகளுக்கு எதிராக வெஞ்சினம் கொண்டால் அது ஜனநாயகம் புத்தெழுச்சியோடு வளர்வதற்கு வழிவகுக்கும். ஆனால், அவர்களை அந்தத் திசையில் செல்லவிடாமல் இப்படி பணத்தால் அடித்து அவர்களது வாக்குரிமையைக் கடத்துவது என்பது ஜனநாயகம் முடக்கப்படுவதற்கே இட்டுச் செல்லும். அது ஒட்டுமொத்தத்தில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் தடையாகிவிடும். சாதி, மதவெறி சக்திகள் தலைவிரித்தாடுவதற்குத் தோதாகிவிடும்.

இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால் இன்றைய உலகமய, தனியார் மய, தாராள மய தாதாக்களின் வரிசையில் அணி சேர்ந்துள்ள பல ஊடகங்கள், ஊடக நெறியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆளுங்கட்சிகளுக்கு சாதகமாக அரசியல் செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுகின்றன. இவர்களால் எப்படி உறுத்தலின்றி ஊழலை விமர்சிக்க முடியும்?

எனினும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. சிறு அக்கினிக் குஞ்சுதான் பெரு நெருப்பாக மாறும். ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்கள் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற உணர்வோடு இடதுசாரிகளும், வாலிபர் - மாணவர் - மாதர் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும், விவசாயி - விவசாய தொழிலாளர் சங்கங்களும், பண்பாட்டு அமைப்புகளும் மக்களின் நியாயமான ஆவேசம் என்ற சிறு பொறியை பெருந்தீயாகக் கனல் வளர்க்கிற கடமையை நம்பிக்கையோடு நிறைவேற்றிட வேண்டும். அப்போது புதிய வரலாறு எழுதப்படும்.                                        

COURTESY: ASHOKBLOGSPOT                                           

No comments:

Post a Comment