தமிழ்மேட்ரிமோனி.காம் சாப்ட்வேரிலும் தீண்டாமை!
அவருடைய வயதுக்கேற்ப ஒரு பெண்ணின் விபரங்கள் தமிழ்மேட்ரிமோனி.காம் இணையதளத்தில் கிடைத்தது. மதம் என்பதற்கு எதிராக கிறித்தவர்-புரோட்டஸ்டன்ட் என்று அந்தப்பெண் குறிப்பிட்டிருந்தார். அடுத்தபடியாக, சாதி என்பதற்கு எதிராக சாதி ஒரு தடையில்லை என்பதாக (caste is no bar) என்று குறிப்பிட்டதைப் பார்த்தவுடன் ஜெயனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது. ஆனால் அது ஒரு விநாடி கூட நிலைக்கவில்லை. சாதி ஒரு தடையில்லை என்பதற்கு அடுத்து அடைப்புக்குறிகளுக்குள் எஸ்.சி,எஸ்.டி நீங்கலாக(SC/ST excuse) என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. எவ்வளவு நாசூக்கு!
சாதி தடையில்லை என்று போட்டுவிட்டு, இவ்வாறு எஸ்.சி மற்றும் எஸ்.டியாக இருந்தால் வேண்டாம் என்பதை குறிப்பிடும்படியாக மென்பொருளை (SC/ST excuse) உருவாக்கியிருக்கும் திருமணப்பதிவு இணையதளம் முதலில் கண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஜெயன். உண்மைதான். இவ்வகை தீண்டாமையை, ஒரு தெரிவாக (option) ஆக இணையதளத்தில் வடிவமைத்திருப்பது, சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை ஒப்புக்கொள்வதாயும், மேலும் வளர்ப்பதாயும் இருக்கிறது.
பத்திரிகைகள் அலுவலகங்களுக்கும் தொலைபேசியில் கோபத்தோடு பேசிய ஜெயன், இது ஒரு நவீன தீண்டாமை என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். இது தனது முதல் அனுபவமல்ல என்கிறார் அவர். கிறித்தவ திருமணத் தகவல் தொடர்பு மையங்கள் சிலவற்றிலும், சாதி பார்க்க மாட்டோம், ஆனால் தலித் என்றால் வேண்டாம் என்று கூறும் பழக்கம் இருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிடுகிறார் அவர்.
மன்னியுங்கள் என்கிற பதத்தில் ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்பதை நாகரீக வார்த்தையாக நம்மில் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இறுக்கமும், ஏற்றுக்கொள்ளவே முடியாத மூர்க்கத்தனமான பிடிவாதமும் கூட அந்த வார்த்தைக்கான அர்த்தமாக இருக்கிறது. ஆம், எல்லாவகை கற்பிதங்களும் சமூகத்திடமிருந்தும், இம்மனிதர்களிடமிருந்தும் தானே பிறக்கிறது? அந்த சாப்ட்வேர் என்ன, தானாகவா முளைத்திருக்கும்? எவ்வளவு அழுக்குகள்தான் இந்த சமூகத்தின் மூளைக்குள் அடைந்து கிடைக்கின்றன!
நன்றி : தீக்கதிர்
No comments:
Post a Comment